இளைப்பாற இடம் தேடும் ஆவியானவர் (The Spirit of God seeks a resting place).

பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான். ஆதி. 8:9

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/44PvQydz7-U

புறா, ஆவியான தேவனுக்கு அடையாளமாகக் காணப்படுகிறது.  இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல  இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார் (மத். 3:16). நோவாவின் நாட்களில் பூமியின் மேல் ஜலம் பெருகிக்காணப்பட்ட வேளையில், பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான். அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே நோவாவினிடத்தில் வந்தது. 

தேவ ஆவியானவர் இன்றும் இளைப்பாற இடம் தேடுகிறவர். இயேசுவில் இறங்கதித் தங்கினது போல, யார்மேல் இறங்கித் தங்கலாம் என்று வாஞ்சையோடு உலாவுகிறவர்.  நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? (1 கொரி. 3:16). நம்மை ஆலயமாக்கி நம்மில் வாசம் பண்ண விரும்புகிற தேவன். ஆவியானவரே என்னில் வந்து தங்கும், என்னை ஆலயமாக்கி வாசம் செய்யும் என்று விரும்பி கேட்டால், ஆவலோடு வந்து தங்கிவிடுவார். அவர் நம்மில் தங்கும் போது, நம்மைப் பரிசுத்தப்படுத்துவார். சீயோன் குமாரத்தியின் பாவத்தின் அழுக்கைச் சுட்டெரித்து நம்மைச் சுத்திகரிப்பார். அவருடைய அக்கினியின் அபிஷேகம், பாவத்தின் வேரைச் சுட்டெரித்து, பாவத்தின் மேல் வெறுப்பை உருவாக்கும். அதுபோல பிதாவின் சித்தத்தை அறிந்து நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சோடு வேண்டுதல் செய்வார். நம்மை ஜெபிக்கத் தூண்டுவார். அவர் சத்திய ஆவியானவர். சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார். பாவத்தைக் குறித்தும் நீதியைக்குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் நமக்குப் போதித்து கண்டித்து உணர்த்துவார். வேதத்தின் மகத்துவங்களை அறியும்படிக்கும் நம்முடைய கண்களைத் திறந்தருளுவார். அவருடைய நாமங்களில் ஒன்று தேற்றரவாளன். சகல ஆறுதலின் தேவனாயிருந்து நம்மைத் தாயைப்போல தேற்றுவார். ஆவியானவர் ஒருவரில் தங்கி வாசம்பண்ணும்போது அந்த நபர் எப்போதும் இயேசுவை மகிமைப்படுத்துவார். இயேசுவின் நாமத்தின் மகிமைக்கானவைகளை மாத்திரம் செய்வார். அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்பதே அந்த நபரின் வாஞ்சையாக இருக்கும்.

ஆவியானவர் நம்மை இயேசுவின் சாயலாக மாற்றி மறுரூபப்படுத்துகிறவர்;. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2 கொரி. 3:18). ஆவியானர் இளைப்பாறுகிற ஆலயமாய் நாம் காணப்படும் போது, அவர் நம்மில் தங்கி வாசம்பண்ணும் போது, இயேசுவின் பரிசுத்தம், இயேசுவின் சிந்தை, தாழ்மை, கீழ்ப்படிதல் எல்லாம் நம்மை நிரப்பும். கிறிஸ்துவின் வாசனையை வீசுகிற பாத்திரங்களாய் நாம் காணப்படுவோம். உலகம் நம்மில் இயேசுவைக் காண விரும்புகிறது. ஆவியானவர் முழுவதுமாக நம்மை ஆக்கிரமிக்கும் போது மாத்திரமே இயேசுவை நாம் வெளிப்படுத்த முடியும். ஆவியானவர் உங்களில் தங்குவதற்கு முழுவதுமாக அர்ப்பணிப்பீர்களா?

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar