நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது, கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற, என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார் (உன். 5:2).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ezYCmd2Bjfw
மணவாளனாகிய இயேசுவுக்கும் மணவாட்டி சபைக்கும் உள்ள அன்பின் உறவின் மேன்மையைக் குறித்து எழுதப்பட்ட புஸ்தகம் உன்னதப்பாட்டாய் காணப்படுகிறது. இயேசு, கல்வாரி சிலுவையில் தன் ஜீவனையே தந்து நம்மேல் அன்பு கூர்ந்தார். அவருடைய ஆழமான அன்பை வார்த்தைகளினால் விவரிக்கமுடியாது. ஆனால் மணவாட்டியாகிய கர்த்தருடைய ஜனங்கள் சோம்பலுடனும், அசதியுடனும் ஆண்டவரிடத்தில் அன்புகூராமல் காணப்படுகிற வேளைகள் அனேகம் உண்டு. சூலமித்தியின் மேல் மணவாளன் கொண்ட அன்பு, உண்மையானதாய் காணப்பட்டது. அவர் அவளை என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! என்றழைத்து, விருந்து சாலைக்கு அழைத்துக் கொண்டுபோய் தன் நேசக் கொடியை அவள் மேல் பறக்கும்படிக்குச் செய்தார். அவருடைய இடதுகையைத் தலையின் கீழ் வைத்து வலக்கரத்தால் மார்போடு அணைத்து, அவளிடம் அன்புகூர்ந்தார். சூலமித்தியும் கூட தன் நேசருடைய சத்தத்தை அறிந்தவளாய், அவருடைய நிழலில் காணப்படுவதையே வாஞ்சிக்கிறவளாய் காணப்பட்டாள். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் மணவாளன் வந்து மணவாட்டியுடன் பேசியும், கதவைத் திற என்று கூறியும், அவர் சத்தத்தை அவள் அறிந்த பின்பும் செவிகொடுக்காமல், கதவைத் திறவாமல் காணப்பட்டாள். என் வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டேன், நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்று சாக்குப் போக்குச் சொன்னாள், கதவைத் திறக்க காலதாமதம் செய்தாள். அதனிமித்தம் அவளுடைய ஆத்துமா மணாளன் துக்கத்தோடு அவளை விட்டுக் கடந்து சென்றுவிட்டார்.
லவோதிக்கேயா சபை மக்கள் குளிருமில்லாமல் அனலுமில்லாமல் வெதுவெதுப்பாய் காணப்பட்டார்கள். இரு நினைவுகளினால் குந்திக் குந்தி நடந்தார்கள், இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கிறவர்களாய் காணப்பட்டார்கள். இந்நாட்களிலும் இப்படிப்பட்ட விசுவாசிகள் திரளாய் காணப்படுகிறார்கள். ஆண்டவர் அவர்களைப் பார்த்து நீங்கள் குளிராயாவது, அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும் என்றும் வெதுவெதுப்பாய் இராதிருங்கள் என்றும் ஆலோசனை கூறினார். அவருடைய ஆலோசனையைக் கேளாதபடி லவோதிக்கேயா சபை ஊழியர்களும், விசுவாசிகளும் ஆண்டவரைச் சபையின் வெளியே விட்டு, கதவை அடைத்துப் போட்டார்கள். ஆண்டவர் அவர்களை முற்றிலும் வெறுத்துவிடாதபடி வாசற்படியில் நின்று தொடர்ந்து தட்டினார், இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் என்றும் கூறினார். ஆகிலும் அவர்கள் கதவைத் திறந்ததாக எழுதப்படவில்லை. இந்நாட்களிலும் அனேகருடைய வாழ்க்கையில் இயேசு இல்லை, அனேக சபைகளிலும், ஊழியங்களிலும் இயேசு இல்லை. அவரை வெளியே நிறுத்திவிட்டார்கள், அவர் தட்டுகிற சத்தமும் செவிகளில் விழவில்லை.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் இருதயக்கதவு ஆண்டவருக்காகத் திறந்ததாய் காணப்படுகிறதா? உங்கள் குடும்பம் என்னும் தோட்டத்தில் கர்த்தர் உலாவுகிறவராய் காணப்படுகிறாரா? சபை நடுவில் பொற்கச்சை, நிலையங்கி தரித்தவராய் இயேசு காணப்படுகிறாரா? சூலமித்தி கதவைத் திற என்று கூறின மணவாளனுடைய சத்தத்திற்கு செவிகொடாமல் காலம் தாழ்த்தினாள், பின்பு தன் தவற்றை உணர்ந்து கதவைத் திறந்தபோது அவர் போய்விட்டார், அவரைத் தேடவேண்டியதாயிற்று. என் நேசருக்குக் கதவைத் திறந்தேன், என் நேசரோ இல்லை, அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை, அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறு உத்தரவு கொடுக்கவில்லை. நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள் அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள் என்று கூறினாள். கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவரை விட்டு விலகி ஜீவிக்கும் போது, யாரை விழுங்கலாம் என்று வகைதேடி சுற்றித்திரிகிற சத்துருவின் வலையில் விழுந்துவிடுவீர்கள். அவன் திருடன், திருடவும் கொல்லவும், அழிக்கவும் வருகிறவன் என்பதை மறந்துவிடாதிருங்கள். நிர்விசாரம் சோதாமின் அழிவுக்குக் காரணமாயிருந்தது, அதுபோல நீங்களும் ஒருநாளும் நிர்விசாரத்தோடும், சோம்பலோடும் காணப்படாதிருங்கள். கர்த்தருக்கு பிரியமானதை எப்பொழுதும் செய்யுங்கள், அவருடைய சிந்தையை அறிந்து செயல்படுங்கள். அப்போது உலகத்தின் முடிவு பரியந்தமும் அவர் உங்களோடும், உங்கள் குடும்பத்தோடும் காணப்படுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar