நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன் (சங்கீதம் 118:17).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/fx_uW2-4aBA
சங்கீதக்காரனுடைய விசுவாச அறிக்கையாய் இவ்வசனம் காணப்படுகிறது. தாவீதின் சங்கீதம் என்ற தலைப்பு கொடுக்கப்படவில்லை என்றாலும், எழுதப்பட்ட முறைமை அவனுடைய சங்கீதம் என்பதை வெளிப்படுத்துகிறது. தாவீதுக்கு அனேக எதிரிகள் காணப்பட்டார்கள். அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள், ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான், அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலே போய், அதைத் தூற்றுகிறான். என் பகைஞரெல்லாம் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, தீரா வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது, படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள், என்று சங்கீதம் 41:5-8ல் தன்னைக் குறித்து தன் எதிரிகளின் எதிர்ப்பார்ப்பை எழுதினார். ஆனால் தாவீது நான் சாவதில்லை என்றும், பிழைத்திருப்பேன் என்றும் விசுவாச அறிக்கைசெய்தான், அப்படியே வாழ்ந்திருந்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, மரணமும் ஜீவனும் உங்கள் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது. சத்துருவும், அவனுடைய ஜனங்களும் உங்களுடைய அழிவை எதிர்ப்பார்த்து, அதற்குரிய காரியங்களை உங்களுக்கு விரோதமாய் ஒளிப்பிடங்களிலும், மறைவிடங்களிலும் செய்கிற வேளையில், நீங்கள் கர்த்தருக்குள் நான் வாழ்ந்திருப்பேன், ஆசீர்வாதமாயிருப்பேன், பிழைத்திருப்பேன் என்று விசுவாச அறிக்கையிடுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து வாழவைப்பார்.
சங்கீதக்காரன் நான் பிழைத்திருந்து கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன் என்றும் கூறுகிறார். கர்த்தர் அவனுடைய வாழ்க்கையில் செய்த அற்புதங்களை மற்றவர்களுக்குக் கூறுவேன் என்றும், ஆதிமுதல் அவர் செய்த அவருடைய மகத்துவமான செய்கைகளை விவரிப்பேன் என்றும் கூறுகிறார். அவருடைய சங்கீதங்கள் ஒவ்வொன்றும் கர்த்தருடைய கரத்தின் கிரியைகளை விவரிப்பதாகக் காணப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்தவற்றை மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். லேகியோன் பிசாசு பிடித்தவன், கர்த்தர் தனக்குக் கொடுத்த அற்புத விடுதலையை தெக்கப்போலி என்னும் நாடு முழுவதும் பிரசித்தம் பண்ணினான், ஜனங்கள்; அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. சமாரியா ஸ்திரீ இயேசுவைக் மேசியா என்று அறிந்து, அதைக்குறித்து சமாரியா பட்டணம் முழுவதும் கூறி, அத்தனை பேரையும் ஆண்டவரண்டையில் அழைத்துக் கொண்டு வந்தாள். அதுபோல ஆண்டவருடைய சிருஷ்டிப்பின் மேன்மையை மற்றவர்களுக்கு விவரியுங்கள். சந்திரயான் 3 நிலவினை அடைந்தது. நிலவைக்குறித்த காரியங்களை விஞ்ஞானிகள் கூறும் போது, அங்கே பதினான்கு நாட்கள் பகலும், பதினான்கு நாட்கள் இரவும் தொடர்ந்து காணப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அப்பொழுது பூமியைப் போல மனிதர்கள் அங்கே ஒரு பகல் உழைத்து ஒரு இரவு தூங்கி வாழ்வது கடினம். வானங்கள் கர்த்தருடையவைகள், பூமியையோ மனுபுத்திரருக்குக்கொடுத்தார் என்று சங். 115:16 கூறுகிறது. பூமியை அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட நாம் வாழ்வதற்கு கர்த்தர் கொடுத்தார். எத்தனை கோள்களையும், கிரகங்களையும் நாம் கண்டுபிடித்து அவைகளில் கால் பதித்தாலும் பூமியைத் தான் மனுப்புத்திரருக்குக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட கர்த்தருடைய சிருஷ்டிப்பின் செய்கைகளை மற்றவர்களுக்கு விவரியுங்கள். அவருடைய இரட்சிப்பின் மேன்மையை மற்றவர்களுக்குக் கூறுங்கள். அவர் நம்மிடத்தில் முந்தி அன்பு கூர்ந்து நமக்காய் கல்வாரி சிலுவையில் ஜீவன் கொடுத்த அன்பின் மேன்மையைப் பற்றி மற்றவர்களுக்குக் கூறுங்கள். அவருக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்யும் மணவாட்டியைச் சேர்த்துக் கொள்ளுவதற்காக மணவாளன் இயேசு திரும்பவும் வரப்போகிறார், அவரை சந்திக்க ஆயத்தப்படுங்கள் என்பதைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்லுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar