உம்முடைய நல்ல ஆவி(Your Good Spirit):-

சங் 143 : 10. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RpHFDLHs5HQ

சங்கீதக்காரனாகிய தாவீது என் ஆவி என்னில் தியங்குகிறது, என் ஆவி தொய்ந்துபோகிறது என்று அவன் சொல்வதை இதே அதிகாரத்தின் பார்க்கமுடிகிறது. தாவீதுக்குள் இருந்த மாம்சீக ஆவி தியங்குகிறதாயும், தொய்ந்துபோகிறதாயும் காணப்படுகிறது. ஆகையால் அவனுடைய சொந்த மாம்சீக ஆவியினால் ஒரு பயனுமில்லை என்பதை அறிந்தவன் ஒரு விண்ணப்பத்தை வைக்கிறான், ஆண்டவரே உம்முடைய நல்ல ஆவி என்னை செம்மையான வழியிலே நடத்தட்டும்; நல்ல ஆவியானவருக்கு என்னை விட்டு கொடுக்கிறேன்; உமக்கு பிரியமானதையெல்லாம் செய்ய பரிசுத்த ஆவியானவர் என்னை நடத்தட்டும் என்பதாக.

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் ஒருபோதும் மாம்சீக ஆவிகளுக்கும், அந்நிய ஆவிகளுக்கும் இடங்கொடாமல் பரிசுத்த ஆவியானவருக்கு இடங்கொடுக்க வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராய் காணப்படுகிறார்.

தாவீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வார்த்தையை சொல்கிறானென்றால், சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான் ( சங் 143 : 3 ) என்பதாகவும், அவன் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறான். இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் தான் அவன் சொல்கிறான் உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு போதித்தருளும் என்பதாக. இவ்வளவு பெரிய நெருக்குமான நேரத்தில் கர்த்தருக்கு பிரியமானதை செய்ய முடியுமா என்று கேட்டால்; அதற்கு பதில் நிச்சயமாக அவருடைய நல்ல ஆவி நம்மை நடத்தும்போது அவருக்கு பிரியமானதை செய்ய முடியும் என்றே சொல்ல முடியும்.

அந்த நல்ல ஆவியானவரிடம் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்கள் பெலவீனங்களில் உதவி செய்வார். பொதுவாக சிறியவர்கள் பெரியவர்களுக்கு உதவி செய்வது வழக்கம். ஆனால் இங்கே ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியானவர், மனிதர்களுக்கு உதவி செய்கிறவராக காணப்படுகின்றார்.

கர்த்தருக்கு பிரியமானதை செய்ய ஆவியானவர் தாமே உங்கள் அனைவருக்கும் போதிப்பராக.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org