அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான் (1 சாமு. 30:19).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_Q2gP3K4-8A
கர்த்தர் எல்லாவற்றிற்கும் ஒருகாலத்தை வைத்திருக்கிறார், அவர் குறித்த வேளையில் எல்லாவற்றையும் நேர்த்தியாய் உங்களுக்குச் செய்வார். சில வேளைகளில் நாம் சில நன்மைகளை இழந்திருக்கலாம், நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதங்களை இன்னொருவர் தடுத்திருக்கலாம், வேலைகளை இழந்து பலமாதங்கள் தவித்திருக்கலாம், வருமானங்களில் குறைவுகள் வந்திருக்கலாம், ஊழியங்களின் பாதைகளில் சோர்வுகளையும் பற்றாக்குறைகளையும் கூட சந்தித்திருக்கலாம். ஆனால் ஆண்டவர் எல்லாவற்றையும் திரும்பத் தருகிறவர், அவர் நம்மைத் திரும்ப எடுத்துக் கட்டுகிறவர். பிசாசை வேதம் திருடன் என்று அழைக்கிறது. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான் என்று யோவான் 10:10 கூறுகிறது. அவன் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், ஆசீர்வாதங்களையும் திருடுகிறவன். ஆனால் கர்த்தர் பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணத்தையும், பலவானிடத்திலிருந்து மதுரத்தையும் தருகிறவர். அவர் ஒன்றும் குறைபடாமல் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் இரட்டிப்பாய் திரும்பத் தருவார்.
தாவீது, சவுல் ராஜாவுக்குப் பயந்து ஓடி ஒளிந்துகொண்டிருந்த நாட்களில், ஒருமுறை தன் குடும்பத்தினர்களையும் அவனுடன் காணப்பட்ட மற்றவர்களுடைய குடும்பங்களையும் சிக்லாகு என்ற இடத்தில் தங்க வைத்தான். பின்பு தாவீதும் அவன் மனிதர்களும், ஆகீசின் ராணுவத்தில் பெலிஸ்தியர்களோடு சேர்ந்து, சவுலின் இஸ்ரவேல் ராணுவத்திற்கு எதிராக யுத்தம் செய்யும்படிக்குப் போனார்கள். ஆனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் ஆகீசின் மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும் படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும், யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை என்றார்கள். ஆகீசும் தாவீதை அனுப்பிவிட்டான். மூன்று நாள் பிரயாணத்திற்குப் பின்பு தாவீதும் அவன் மனுஷரும் சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின் மேலும் சிக்லாக்கின் மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய் விட்டார்கள். தாவீது ஆகீசிற்கு உதவுவதற்குக் கடந்து சென்றான், ஆனால் சிக்லாக்கில் அவன் சொந்த குடும்பத்தின் ஜனங்களைப் பாதுகாக்கவில்லை. சூலமித்தியும் என் சொந்தத் திராட்சத்தோட்டத்தை நான் காக்கவில்லை என்று அங்கலாய்த்தாள். சில வேளைகளில் துன்மார்க்கமாய் ஜீவிக்கிற மற்றவர்களுக்குப் பொருளாதார உதவி செய்யும்படிக்குச் சென்று தன் குடும்ப சமாதானத்தை இழக்கிறவர்கள் உண்டு. மாமிசத்தில் காணப்படுகிறவர்களுக்கு வேலைகளில் உதவிசெய்து அதினிமித்தம் தங்கள் பெயர்களுக்குக் கனவீனத்தைச் சம்பாதித்தவர்களும் உண்டு. ஆகையால் எதை யாருக்குச் செய்தாலும் ஞானத்தோடு, தேவ சித்தத்தை அறிந்து செயல்படுங்கள். தாவீது சிக்லாக்கிற்கு வந்தபின்பு, தாவிதும் அவனோடிருந்வர்களும் தங்கள் மனைவிகளும் குமாரர்களும் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்பதைக் கண்டு தங்களுக்குப் பெலனில்லாமல் போகுமட்டும் அழுதார்கள். தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். ஆனாலும் தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திகொண்டு, கர்த்தரிடத்தில் விசாரித்தபின்பு, அமலேக்கியர் மேல் யுத்தம் செய்து, அவர்களை மேற்கொண்டு ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்.
நம்முடைய தேவன் சத்துரு நம்மிடமிருந்துத் திருடின எல்லாவற்றையும் திருப்பித்தருகிறவர். ஆகையால் கர்த்தருக்குள்ளாக உங்களைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள். இழந்துபோன ஆசீர்வாதங்களை இரட்டிப்பாக திரும்ப தருவார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பீர்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார் (யோபு 42:10). வெட்டுக்கிளிகளும் பச்சைக்கிளிகளும் முசுக்கட்டைப் பூச்சிகளும் பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பார். நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள். ஆகையால், கர்த்தருடைய பிள்ளைகளே, இழந்து போன நன்மைகளை நினைத்துக் கவலைப்படாமல், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் திரும்பித் தருகிற தேவனை நோக்கிப் பாருங்கள். நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன் என்று வாக்களித்தவர் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் திரும்பத் தந்து இந்த மாதம் முழுவதும் நடத்துவாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar