என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். (எரேமியா 33:3).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/kzrbZVPb0p4
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா, எரேமியா தீர்க்கதரிசியை அவனுடைய தீர்க்கதரிசனத்தினிமித்தம் காவற்சாலையின் முற்றத்திலே அடைத்துவைத்திருந்தான். அச்சமயத்தில் கர்த்தர் எரேமியாவை நோக்கி மேற்கண்ட வாக்குத்தத்த வசனத்தை உரைக்கிறார்.
இந்த வசனத்தை கர்த்தர் எரேமியாவுக்கு சொல்லும்போது, யேகோவா என்னும் நாமமுள்ள கர்த்தராகிய நான் இதை சொல்லுகிறேன் என்று குறிப்பிட்டு கூறுவதை முந்தின வசனத்தில் பார்க்கமுடியும். மேலும் முற்காலத்தில் கர்த்தர் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் “சர்வவல்லமையுள்ள தேவன்” என்னும் நாமத்தினால் அறிமுகமாகியிருந்தார். ஆனால் யாத்திராகமம் 6:2ல் மோசேக்கு “யேகோவா” என்னும் நாமத்தினால் அறிமுகமாகி, யாத்திராகமம் 6:8ல் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று இஸ்ரவேல் புத்திரருக்கு சொல் என்று கர்த்தர் கூறுவதை வாசிக்க முடியும்.
யெகோவா அல்லது யாவே என்னும் நாமத்தின் சிறப்பு என்னவென்றால், நியாதிபதிகள் 6:24ன் படி சமாதானம் அருளும் கர்த்தர் (யெகோவா ஷாலோம்). 2நாளாகமம் 12:6ன் படி நீதியுள்ள கர்த்தர். ஏசாயா 30:18ன் படி நீதிசெய்கிற கர்த்தர். எரேமியா 23:6ன் படி நீதியாயிருக்கிற கர்த்தர். சங்கீதம் 23:1ன் படி மேய்ப்பராய் இருக்கிற கர்த்தர். ஏசாயா 33:22ன் படி நியாயாதிபதியாகிய கர்த்தர், நியாயப்பிரமாணிகராகிய கர்த்தர், ராஜாவாகிய கர்த்தர், மற்றும் இரட்சிக்கிற கர்த்தர். எரேமியா 33:2ன் படி சிருஷ்டிப்பின் கர்த்தர். சங்கீதம் 127ன் படி, கட்டுகிறவர், பாதுகாத்து பராமரிப்பவர், பிரயாசத்திற்கான பலனை கொடுப்பவர் இவ்வாறு ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட மகத்துவமுள்ள நாமத்தையுடைய கர்த்தர் தான் இன்று நம்மைப் பார்த்து கூறுகிறார், என்னை நோக்கிக் கூப்பிடு என்று. அவருடைய நாமத்தின் மகத்துவத்தை அறிந்தவர்களாக அவரை நோக்கி கூப்பிடும்போது, நம்முடைய அறிவுக்கு எட்டாத பெரிய காரியங்களை நமக்கு தெரியப்படுத்துவார். அது உங்கள் வீட்டை குறித்ததாக இருக்கலாம், சபையை அல்லது பட்டணத்தைக் குறித்ததாக இருக்கலாம் அல்லது ராஜாக்களைக் குறித்ததாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் பதில் கொடுப்பது நிச்சயம்.
ஒருவேளை நீங்கள் சரீர சுகவீனத்தோடும், கஷ்டங்களோடும் சமாதானமில்லாமல் இருக்கிறீர்களா? எரேமியா 33:6 சொல்லுகிறது நான் உங்களுக்கு, சவுக்கியம் வரப்பண்ணுவேன் ஆரோக்கியம் வரப்பண்ணுவேன், உங்களைக் குணமாக்குவேன், உங்களுக்குப் பரிபூரண சமாதானத்தை அருளி, என்னுடைய சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன் என்று.ஒருவேளை என் சிறையிருப்பின் காலம் எப்போது முடியும் என்று புலம்பிக்கொண்டு இருக்கிறீர்களா? எரேமியா 33:7 சொல்லுகிறது; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி உங்களை கட்டுவேன் என்று. ஒருவேளை நீங்கள் குற்ற மனசாட்சியோடு மன்னிப்புக்காக ஏங்கி கொண்டிருக்கிறீர்களா? எரேமியா 33:8 சொல்லுகிறது; நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் செய்த எல்லா அக்கிரமங்களையும் நீங்கலாக்கிச் சுத்திகரித்து, உங்கள் துரோகங்கள் எல்லாவற்றையும் மன்னிப்பேன் என்று.
ஒருவேளை நன்மையான காரியங்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறீர்களா? எரேமியா 33:9 சொல்லுகிறது; நான் உங்களுக்கு நன்மையையும், சமாதானத்தையும் கொடுக்கப்போகிறேன் என்று. அதுமட்டுமல்ல, கர்த்தர் உங்களுக்கு அருளும் நன்மையினிமித்தமும், சமாதானத்தின் நிமித்தமும், பூமியின் எல்லா ஜாதிகளும் உங்களை பார்த்து பயந்து நடுங்குவார்கள் என்றும் மேலும் அதுவே கர்த்தருக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கப் போகிறது என்று இவ்வேதவசனம் தெளிவாகக் கூறுகிறது.
மோசேக்கு யேகோவா என்னும் நாமத்தால் அறிமுகமான கர்த்தர், தாம் சொன்னபடியே இஸ்ரேல் புத்திரருக்கு கானானை சுதந்திரமாக கொடுத்தார். ஆம் இன்றும் அந்த கனத்திற்குரிய நாமத்தையுடையவராகிய கர்த்தரை நோக்கி கூப்பிடும்போது, அவர் சொன்னபடியே நமக்கு உத்தரவு கொடுத்து, நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிப்பார்.
ஆம், தேவனுடைய ஜனங்களே; நம்முடைய கர்த்தர் சிருஷ்டிகர். உருவாக்குகிறவர். ஸ்திரப்படுத்துகிறவர். இருக்கிற சூழ்நிலையிலிருந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் தாம் சொன்னபடியே மனித ஞானத்திற்கு எட்டாத பெரிய காரியங்களை வெளிப்படுத்துவார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு செய்த அனைத்து அற்புதங்களையும், அதிசங்களையும் உங்கள் வாழ்க்கையில் செய்ய வல்லவராயிருக்கிறார்.
கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
John Finny
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar