உத்தமமாய் தேவனோடு சஞ்சரியுங்கள்(Walk faithfully with God).

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில்,      காணப்படாமற்போனான், தேவன் அவனை எடுத்துக்கொண்டார் (ஆதி. 5:24).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/uaVAfpmDOWM

ஏதேன் தோட்டத்திற்கு வெளியே,      இந்த பூமியில் தேவனோடு உத்தமமாகவும்,      உண்மையாகவும் நடக்க முடியும் என்பதை நிரூபித்த முதல் மனிதன் ஏனோக்காய் காணப்படுகிறார். அவன் தேவனுக்குப் பிரியமான ஜீவியம் செய்தான்,      அவனுக்கு குடும்பமும்,      பிள்ளைகளும் காணப்பட்டிருந்தும் தேவனோடு ஐக்கியமாய்,      அவரோடு ஒருமனப்பட்டு நடந்தான். இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய  ஒருமித்து நடக்க கூடுமோ என்று வேதம் கேட்கிறது. ஆண்டவருக்குப்  பிரியமானது ஏனோக்கின் பிரியமாயிருந்தது. ஆண்டவரைக் காயப்படுத்துகிற காரியங்கள் ஏனோக்கை காயப்படுத்தியது. அவருடைய வருகையைக் குறித்த  செய்தியை மற்வர்களுக்கு அறிவிக்கிறவனாகவும் காணப்பட்டான். ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து,      இதோ,      எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும்,      அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,       தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும்,      அவர்களைக் கண்டிக்கிறதற்கும்,      ஆயிர மாயிரமான  தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான் (யூதா 14,     15).  அவன் அப்படி விசுவாசத்தோடு வாழ்ந்து,      தேவனோடு நடந்ததால்,      திடீரென்று ஒருநாள் அவன் காணப்படாமற்போனான்,      கர்த்தர் அவனை தன்னோடு காணப்படும் படிக்கு எடுத்துக் கொண்டார். கர்த்தருடைய பிள்ளைகளே,      ஆண்டவரோடு; சஞ்சரிக்கிறீர்களா? அப்படிப்பட்ட உங்களை மட்டும் சேர்த்துக் கொள்ளும் படிக்கு இயேசு வரப்போகிறார். அவருடைய வருகையின் எக்காள சத்தம் மத்தியவானில் தொனிக்கும் போது,      இயேசுவுக்காக உத்தமும்,      உண்மையுமாய் ஜீவிக்கிறவர்களும்,      அவருக்குள் மரித்தவர்களும் ஆண்டவரோடு கூட காணப்படும் படிக்கு எடுத்துக்கொள்ளப் படுவார்கள். எதையிழந்தாலும் கர்த்தருடைய வருகையை இழந்து,      கைவிடப்பட்டு விடாதிருங்கள். 

ஏனோக்கு,      நோவா,      ஆபிரகாமின் நாட்களில் தேவாலயம் இல்லை,      வேத புத்தகம் இல்லை,      சபை கூடிவருதலும் இல்லை. பின்பு அவர்கள் எப்படி தேவனோடு சஞ்சரிக்க முடியும் என்ற கேள்வி எழும்பக்கூடும். ஏனோக்கு பிறக்கும் போது,      ஆதாமுக்கு 622 வயது ஆனது. ஆதாம் 930 வருஷம் உயிரோடிருந்தான்,      ஒருவேளை ஆதாமும் ஏனோக்கும்,      சுமார் 308 வருஷங்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கக் கூடும். பகலின் குளிர்ச்சியான வேளையில் ஆண்டவர் ஏதேன் தோட்டத்தில் உலாவின மகிமையின் காட்சியை,      ஆதாம் ஏனோக்கிற்கு விளக்கியிருக்கலாம்;. அவருடைய பரிசுத்தத்தைக் குறித்தும்,      அவருடைய அன்பான வார்த்தைகளைக் குறித்தும்,      அவரோடு ஐக்கியமாய் காணப்பட்ட மகிழ்ச்சியான நாட்களைக் குறித்தும் ஆதாம் ஏனோக்கோடு பேசியிருக்கலாம்.  பாவம் செய்து,      ஏதேனிலிருந்து துரத்தப்படும் வரைக்கும் ஆண்டவரோடு நடந்த நாட்கள் அற்புதமாயிருந்ததைக் குறித்து அவனுக்கு விளக்கியிருக்கலாம். கர்த்தருடைய பிள்ளைகளே,      ஒருநாள் நாம் பரலோகத்திற்குக் கடந்து சென்றபின்பு,      ஆண்டவருடைய மகிமையையும்,      அவருடைய பரிசுத்தத்தையும் பார்க்கும் போது,       அவருக்காக  இந்தப்பூமியில் இன்னும் பரிசுத்தமுள்ள ஜீவியம் செய்து,      அவருடைய பணியை இன்னும் முழுமனதோடும்,      முழு உள்ளத்தோடும்,      முழு பெலத்தோடும் செய்து,      அவருக்காக இன்னும் அதிகமாய் பிரயாசப்பட்டு ஆத்தும ஆதாயம் செய்திருக்கலாமே என்று நாம் ஏங்கப்போவது நிச்சயம். அத்துடன் ஏனோக்கிற்கு அவனுடைய 65வது வயதில் மெத்துசேலா என்ற ஒரு குமாரன் பிறந்தார். அந்த பெயரின் அர்த்தம் அவன் மரிக்கும் போது வெள்ளம் வரும்,      வெள்ளத்தினால் ஒரு அழிவு வரும் என்பதாக அவன் முன்னறிந்தான். ஒருவேளை,      அப்பொழுதிலிருந்து அவன் தன் வாழ்க்கையைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து ஜீவிக்க தீர்மானித்திருக்கலாம். அதுவரை உலகத்தில் சஞ்சரித்தவன்,      இப்பிரபஞ்சத்தின் வேஷத்தைத் தரித்தவன் அன்றிலிருந்து கர்த்தரோடு நடந்தான்,      வரப்போகிற நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க அவன் தீர்மானித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே,      வேதம் வரப்போகிற நியாயத்தீர்ப்பைக்  குறித்து அதிகமாய் கூறுகிறது. அவருடைய வருகையின் காலகட்டத்தில் என்ன நடக்கும் என்பதைக் குறித்து மத்தேயு 24ம் அதிகாரத்தில் இயேசு கற்றுக்கொடுத்தார். மணவாட்டி சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு இந்த பூமியில் ஆண்டவர் ஊற்றப்போகிற ஏழு முத்திரை நியாயத்தீர்ப்பு,      ஏழு எக்காள  நியாயத்தீர்ப்பு,      ஏழு கோபக்கலச நியாயத்தீர்ப்பு என்பதைப்பற்றி வெளிப்படுத்தல் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. வரப்போகிற நியாயத்தீர்ப்புகளுக்கு  நாம் தப்பிக்க வேண்டும் என்றால்,      இப்போது ஆண்டவருடன் நடக்கப் பழகுங்கள். அவருக்குப் பிரியமானதைச் செய்யுங்கள். உமக்குப் பிரியமானதைச் செய் எனக்கு நீர் போதித்தருளும் என்பது நம்முடைய ஜெபமாய் கூட இருக்கட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar