சங். 102:13. தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/FlU5yCvwsQs
சீயோன் என்பது கர்த்தருடைய சபை. சபை கர்த்தருடைய ஜனங்களாகிய உங்களை குறிக்கிறது. நீங்கள் தேவன் தங்கும் ஆலயம் என்று வசனம் சொல்லுகிறது. சபையாகிய உங்களுக்கு தயைசெய்யுங்காலம் வந்தது. இந்த வசனம் துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி விண்ணப்பிக்கும்போது கர்த்தர் சொன்ன வார்த்தையாய் காணப்படுகிறது.
கொள்ளைநோயினிமித்தமாக அநேக சபைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அநேக மதவாத விஷக்கிருமிகளால் சபைகள் அடைக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் கர்த்தர் கொடுக்கிற வார்த்தை சபைக்காக தயை செய்யும் காலம், குறித்த நேரம் வந்தது என்று சொல்கிறார். மூடப்பட்ட சபைகள் திறக்கப்பட, இடிக்கப்பட்ட சபைகள் கட்டப்பட, பிரிந்துபோன சபைகள் ஒன்றுசேர தயை செய்யும் காலம் வந்தது; குறித்த நேரம் வந்தது. கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். அப்பொழுது கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிவரும். இந்த கல்லின் மேல் சபையை கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளாது என்பது கர்த்தருடைய வார்த்தை.
அவர் தயை செய்கிறவர். ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (சங் 12:5). நீங்கள் விடும் பெருமூச்சை அறிவார். நம்பினவர்களால் கைவிடப்பட்டு சிக்கித்தவிப்பவர்களுக்கு கர்த்தர் தயை செய்வார். உங்கள் வேலை ஸ்தலங்களில் உயரதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்வார். முற்செடியில் தோன்றின கர்த்தரின் தயவு யோசேப்பை உயர்த்திவைத்தது. அதுபோல கர்த்தரின் தயவு உங்கள் வேலை ஸ்தலங்களில் உயர்ந்திருக்கும்படி செய்யும். ஒருவேளை பாசான் தேசத்து எருதுகள் உங்களை சூழ்ந்து இருப்பதை போல தோன்றலாம், சிங்கங்களின் பற்களுக்கு இரையாவதை போல தோன்றலாம், அநேகரால் ஒடுக்கப்படுகிற சூழ்நிலையாக காணப்படலாம், எல்லாவற்றிற்கும் மேலாக தேவ தயவு உங்களை உயர்த்தும் வேளை வந்துவிட்டது என்பதை விசுவாசியுங்கள்.
ரூத் சொன்னாள் யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்பதாக. போவாஸின் கண்களில் அவளுக்கு தயை கிடைத்தது. அதுபோல உங்களுக்கும் இயேசுவின் கண்களில் தயை கிடைக்கும்.
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது என்றும் வசனம் சொல்லுகிறது. ஆகையால் சோர்ந்து போகாமல் இருங்கள். உங்களுக்கு தயைசெய்யும் காலமும், குறித்த நேரமும் வந்தது.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org