யெகூ அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான், அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான், அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொன்னான் (2 இராஜாக்கள் 10:15)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/CO2qsyL9d2A
யெகூ, இஸ்ரவேல் தேசத்தில் சேனாபதியாகக் காணப்பட்டவன். ஆகாப் ராஜாவும், யேசபேலும் முழு இஸ்ரவேலில் தேசத்தைப் பாவத்தாலும், பாகாலின் பலிபீடங்களினாலும் நிரப்பி வைத்திருந்தார்கள். இஸ்ரவேல் தேசத்தைச் சுத்திகரிக்கும் படிக்கு தேவன் யெகூவை தெரிந்தெடுத்தார். அவனை வைத்து ஆகாபின் குடும்பத்தாருக்குக் கர்த்தர் நீதியை சரிக்கட்டத் தீர்மானித்தார். கர்த்தர் கொடுத்த பணியை வைராக்கியத்தோடு யெகூ செய்து கொண்டு வந்த வேளையில் அவனுக்கு மனுஷ உதவி தேவைப்பட்டது. அப்போது அவன் நண்பனாகிய ரேகாபின் குமாரன் யோனதாபை சந்தித்தான். யோனதாப் முழு இஸ்ரவேல் தேசமும் பாவத்தில் காணப்பட்ட வேளையில் தன் குடும்பத்தின் ஜனங்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தான், அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்கள். எரேமியா, ரேகாபின் குடும்பத்தினரோடு பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக்கொடுத்தான். அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை, ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும் படிக்கு, நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலிருங்கள் என்று எங்களுக்குக் கட்டளையிட்டார் என்றார்கள். பாவம் செய்கிற தேசத்தின் ஜனங்களின் நடுவில் பரிசுத்தமாய் ரேகாபின் குடும்பம் காணப்பட்டது. யெகூ, யோனதாபைச் சந்தித்து அவனை உபசரித்து, என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான். உடனே தன் இரதத்தில் ஏற்றி கர்த்தர் கொடுத்த கட்டளையை நிறைவேற்றுகிற பணியில் அவனையும் பயன்படுத்தினான், இஸ்ரவேல் தேசம் ஓரளவு சுத்திகரிக்கப்பட்டது.
இந்நாட்களில் தேவஜனங்களுக்குள் ஒத்த இருதயம் காணப்படுகிறதா? ஏக சிந்தையும், இசைந்த ஆத்துமாக்களுமாய் காணப்படுகிறோமா? நம்முடைய இருதயங்கள் செம்மையாய் காணப்படுகிறதா? சபைகளில் பரிசுத்தத்திற்காய் இணைந்து போராடுகிறோமா? சபை ஜனங்களுக்குள் காணப்படுகிற பரிசுத்தம், சமுதாயத்தில் பிரதிபலிக்கும், அதுதான் தேசம் சுத்திகரிக்கப்படுவதற்கு வழியாய் காணப்படுகிறது. ஆனால் சபைகளில் ஒத்த இருதயமும், ஒரு மனமுடைய ஜனங்களைக் கண்டு பிடிப்பது கடைசி நாட்களில் கடினமாய் காணப்படுகிறது. ஊழியர்களோடு இணைந்து செயல்படுகிற ஜனங்கள் வெகு சிலராய் காணப்படுகிறார்கள். ஆத்தும ஆதாயப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ளுகிறவர்களும் குறைந்து போய்விட்டார்கள். இரு நினைவுகள் உடையவர்களும், இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்கிறவர்களும், வெளிப்படைத்தன்மையற்றவர்களும் சபைகளில் பெருகிவிட்டார்கள். கர்த்தராலும், ஊழியர்களாலும் விசுவாசிகளை நம்பமுடியவில்லை. இயேசுவின் ஊழியத்தின் நாட்களில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள், அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை என்று வேதம் கூறுகிறது. அதுபோல விசுவாசிகளையும், உடன் ஊழியங்களில் காணப்படுகிறவர்களைக் கூட நம்புவதற்குக் கடினமான இக்காலகட்டத்தில், யெகூவும், யோனதாபும் நமக்கு முன்மாதிரியாய் காணப்படுகிறார்கள். வேதம் யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது என்றும், யோனத்தான் அவனைத் தன் உயிரைப் போலச் சிநேகித்தான் என்றும் கூறுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே சபையாய் இணைந்து ஒன்றித்துச் செயல்படுங்கள். சிதறடிக்கிற சத்துருவுக்கும், அவனுடைய ஆலோசனையைப் பெற்று உங்களுக்குள்ளாய் இருநினைவுகளை விதைக்கிறவர்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் இடம் கொடாதிருங்கள். யெகூவும், யோனதாபும் ஒத்த இருதயத்தோடு செயல்பட்டதினால், ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்கப் புருஷன் இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் வாக்கு கொடுத்தார், அதுபோல கர்த்தர் யெகூவை நோக்கி உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின் மேல் நான்கு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார். கர்த்தருடைய பிள்ளைகள் ஒருமித்து வாசம் செய்யும் போது, கர்த்தர் உங்களுக்கு ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar