உண்மையான நண்பன் (The True Friend).

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து நீ நேற்றுத்தானே வந்தாய், இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும் படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்துக்குப் போகிறேன்,  நீ உன் சகோதரரையும் அழைத்துக் கொண்டு திரும்பிப்போ, கிருபையும் உண்மையும் உன்னோடே கூட இருப்பதாக என்றான் (2 சாமு. 15:20).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/G1buaUEG434

தாவீது,     தன் குமாரனாகிய அப்சலோமுக்கு பயந்து,     வனாந்தரத்திற்கு நேராய் ஓடிப்போனான். அப்போது அவனுடன் சிலர் கடந்து சென்றார்கள். அனேக நண்பர்கள் அவனுக்கு காணப்பட்டிருந்தும்,     தாவீது,     ராஜா என்ற ஸ்தானத்தை இழந்த உடன்,     அனேகர் அவனை விட்டுப் பின்வாங்கி புதிய ராஜாவாகிய  அப்சலோமோடு  சேர்ந்து கொண்டார்கள். நம்முடைய கடினமான நேரத்தில் தான் உண்மையான நண்பர்களை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் நன்கு காணப்படுகிற வேளையில் நம்மைச் சுற்றி அனேகர் காணப்படுவார்கள். ஆனால் கடினமான நேரங்களில் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். தாவீதிற்கும் இதே நிலை ஏற்பட்டது. அவனுக்கு நெருக்கமானவர்கள் அனேகர் அவனைக் கைவிட்டு விட்டுப்  போய்விட்டார்கள். ஆனால் கித்தியனாகிய ஈத்தாய், ஒருநாள் அல்லது கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் அவனிடம் வந்திருந்தும்,     அவன் ராஜாவோடு கடந்து சென்றான். கூட்டத்தில்  இவனை தாவீது  பார்த்தவுடன்,     நீ எங்களுடனே கூட வருவானேன்? நீ திரும்பிப்போய்,     புதிய ராஜாவுடனே கூட இரு,     நீ அந்நிய தேசத்தான்,     நீ உன் இடத்துக்குத் திரும்பிப் போகலாம் என்றான். அவன்  ராஜாவைப் பார்த்து,     ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ,     அங்கே உமது அடியானும்,     செத்தாலும் பிழைத்தாலும் இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்கிறேன் என்றான். அவன் கொஞ்ச நாட்கள் தாவீதை  சேவித்திருந்தும்,     தன் உண்மையையும்,     உத்தமத்தையும்  வெளிப்படுத்தினான். ஆகையால் பின்னாட்களில் தாவீது ராஜா அவனை உயர்த்தி முக்கியமான முப்பது பேர்களில் ஒருவனாக அவனை நியமித்தான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     பரலோக தாவீதாகிய இயேசுவை உண்மையாய் சேவியுங்கள். அவருக்கு முந்தினோர்,     பிந்தினோர் என்று யாருமில்லை. எல்லாரையும் ஒன்று போல நேசிக்கிறவர். நீங்கள் அனேக வருஷங்கள் ஆண்டவரைச் சேவித்துக்கொண்டு வருவது நல்லது,     ஒருவேளை புதிய விசுவாசிகளாய் கூட நீங்கள் காணப்படலாம். அதிகாலையில் வேலைக்கு வந்தவர்களுக்கும் சாயங்காலம் வந்தவர்களும்  நியாயமான ஒரே கூலியைக் கொடுத்தவர் அவர். நீங்கள் உத்தமாய் ஆண்டவரைச் சேவிக்கும் போது உங்களுக்கு நன்மையானதைத்   தருவார்.    ஆண்டவருடைய உண்மை நண்பனாய் காணப்படுங்கள். அவருக்குப் பிரியமானதைச் செய்ய பிரயாசப்படுங்கள். அவரை சேவிப்பதினால் கடினமான விளைவுகளைச் சந்திக்க நேரிட்டாலும் உங்கள் உத்தமத்திலிருந்து ஒருநாளும் விலகிவிடாதிருங்கள். அப்போது உங்களைக் கனப்படுத்தி ஆசீர்வதிப்பார். ஆண்டவருடைய உள்வட்டத்தில் நீங்கள் காணப்படுவீர்கள். ஆனால் கடைசி நாட்களில் உண்மையான நபர்களைப் பார்ப்பது கடினம்,     உத்தமமாய்  கர்த்தரைச் சேவிக்கிறவர்கள் குறைந்து போய் காணப்படுகிற காலமிது. கள்ளமும் கபடும் எங்கும் காணப்படுகிறது.  விசுவாசிகளிடமும்  உண்மையில்லை.  ஊழியப் பாரங்களைப் பகிர்ந்து கொள்ளுவதற்கும்,     அதைப் புரிந்து கொள்வதற்கும் உண்மையான நபர்கள் இல்லை. இப்படிப்பட்ட பொல்லாத நாட்களில் யார் ஈத்தாயைப் போல உண்மையை வெளிப்படுத்துகிறார்களோ,     அவர்களை உண்மையும்,     உத்தமமுள்ள ஊழிய்காரனே என்று கர்த்தர் அழைத்து ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar