இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது, நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்த படியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான் (1 சாமு. 15:23).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/lFIl4wVbRsQ
இரண்டகம் என்பது தேவனால் நியமிக்கப்பட்ட அதிகாரங்களுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் எதிர்த்து நிற்பதாகும். அது பில்லிசூனியம் பண்ணுகிற பாவத்திற்கு ஒத்ததாகக் காணப்படுகிறது. தேவ ஜனங்கள் பில்லிசூனியம் செய்யாமலிருக்கலாம், ஆனால் கர்த்தருடைய காரியங்களுக்கு நீங்கள் எதிர்த்து நிற்கும் போது, நீங்கள் பில்லிசூனியம் செய்கிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள். முரட்டாட்டம் என்பது கீழ்ப்படியாமையும், அடங்காமையும் குறிக்கிறது. உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள் என்று வேதம் கூறுகிறது. ஆனால் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் காணப்படும் போது நீங்கள் விக்கிரக ஆராதனை செய்கிறவர்களுக்கு ஒப்பாய் காணப்படுகிறீர்கள். இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல், கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமலும், அடங்காமலும் காணப்பட்டதினால், காத்தர் அவனை ராஜாவாயிராதபடிக்கு தள்ளிப் போட்டார். கர்த்தர், சவுலுடைய ஸ்தானத்தில் தன்னுடைய இருதயத்திற்கு ஏற்ற தாவீதை ராஜாவாக வைத்தார். பத்துமுறை வாதைகளை அனுப்பியும், பார்வோன் தன் இருதயத்தை கடினப்படுத்தி, இஸ்ரவேல் ஜனங்களைப் போகவிடாததினால், அவனுடைய சேனை முழுவதும் சமுத்திரத்தில் அமிழ்ந்து போவதற்கு அவன் காரணமானான்.
இரண்டகமும், முரட்டாட்டமும் இன்று அனேக கிறிஸ்தவர்களிடமும், கிறிஸ்தவ குடும்பங்களிலும் காணப்படுகிறது. பிள்ளைகள் பெற்றோருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறார்கள், புருஷனும், மனைவியும் ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கிறார்கள். சபைகளுக்குள்ளும் இந்ந ஆவி கிரியை செய்கிறது. பிசாசிற்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான் என்று வேதம் கூறுகிறது, ஆனால் அவனுக்கு எதிர்த்து நிற்பதற்க பதிலாகக் கர்த்தருடைய காரியங்களுக்கு விரோதமாகவும், ஆவியானவருக்கு விரோதமாகவும் எதிர்த்து நிற்கிறவர்கள் திரளாய் உண்டு. கர்த்தருடைய வேலை, அது நல்ல வேலை, அதற்கு தங்கள் கரங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒளிப்பிடங்களிலும், மறைவிடங்களிலும் கர்த்தருடைய பணியைத் தடுக்கிறவர்கள் அனேகர் உண்டு. கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன், இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள் (யாத். 32:9) என்றார். கர்த்தருடைய தூதனானவர் ஆகாரைப் பார்த்து, நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார் (ஆதி.16:9). அவர்களைப் போல வணங்காக்கழுத்துள்ள, அடங்காதவர்களாய் காணப்படாதிருங்கள். இவர்களால் தேவனுடைய ராஜ்யம் கட்டப்படுவதற்க பதிலாக இடித்து தள்ளப்படுகிறது.
இரண்டகமும், முரட்டாட்டமும் உங்கள் வாழ்க்கையில் வருகிற ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் தடைசெய்து விடும். சவுலைக் குறித்து கர்த்தர் கொண்டிருந்த நோக்கங்கள் அவனுடைய பாவங்களால் வீணானது. அவனுடைய வாழ்க்கையில் காணப்பட்ட தேவனுடைய பாதுகாப்பு இல்லாமல் போனது. ஆகையால் பெலிஸ்தியர்களின் அம்பு அவனைக் குற்றுயிராக்கியது. கடைசியில் தன்னைத் தான் தற்கொலை செய்துகொண்டான். அவனுடைய வம்சத்தில் தொடர்ச்சியாக ராஜாக்கள் எழும்பவில்லை. அவனுடைய குடும்பமும் வரவர பலவீனப்பட்டுப் போனது. ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகள் ஒருநாளும் இரண்டகமும், முரட்டாட்டமும் உடையவர்களாய் காணப்படாதிருங்கள், அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar