நல்ல மருந்து (Good Medicine).

நீதி 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/7QIZBADE71c

ஒரு நபருக்கு சில நாளாக தீராத காய்ச்சல் இருந்து வந்தது. காய்ச்சல் சரியாக ஒரு மருத்துவரை அந்த நபர் அணுகினார். மருத்துவரும் சில மருந்து மாத்திரைகளை சாப்பிடும்படி கொடுத்தார். அவர் கொடுத்த மருந்துகளை உண்ட பிறகும் அவருக்கு காய்ச்சல் நிற்கவில்லை. ஆகையால், அந்த நபர் மற்றொரு மருத்துவரை அணுகி அவரிடம் வேறொரு மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொண்டார். அந்த மருந்தை உட்கொண்ட பிறகு அவருக்கு இருந்த காய்ச்சல் நின்றுபோனது. இதுபோல தான் கர்த்தர் நமக்கு நல்ல மருந்தை கொடுக்க பிரியமாய் இருக்கிறார். அவர் கொடுக்கும் மருந்தின் பெயர் மனமகிழ்ச்சி என்பதாகும். கர்த்தர் நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார். உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள் (லேவி 23:40 ) என்று வசனம் சொல்லுகிறது. வாரத்தின் எல்லா நாளும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள். சூழ்நிலைகள் எப்படியாக இருந்தாலும் எல்லா நாளும் மகிழ்ச்சியாய் இருங்கள்.

மறுபக்கம், சத்துருவும் ஜனங்களை மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்கிறான். சிம்சோனை சிறைச்சாலையில் அடைத்தவர்கள் மனமகிழ்ச்சியாய் இருந்தார்கள். யேசபேல் ஆகாபிடம் சொல்லுவாள் நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்பதாக. இப்படி சத்துருவும் மகிழ்ச்சியாய் இரு என்று சொல்லுவான். அவன் கொடுக்கிற மகிழ்ச்சி நித்தியத்திற்கு அழைத்துச்செல்லாது. ஆனால் தேவன் தரும் மகிழ்ச்சி சமாதானத்தை தரும்.

கர்த்தர் சீயோனின் சிறையிருப்பை திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்களை போல இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் வாய் நகைப்பினாலும், நாவு ஆனந்த களிப்பினாலும் நிறைந்திருந்தது. கர்த்தர் சீயோனின் சிறையிருப்பை திருப்பியது தான் அவர்களுக்கு கொடுத்த நல்ல மருந்து. தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். கர்த்தருடைய பணியை செய்ய வேண்டும் என்ற ஆவல் தாவீதுக்கு இருந்தது. அந்த ஆவல் தான் கர்த்தர் கொடுத்த நல்ல மருந்து. சங்கீதக்காரன் சொல்லுகிறான் என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர் (சங் 30:11) என்பதாக. புலம்பலை சங்கீதக்காரனுக்கு கர்த்தர் ஆனந்தக் களிப்பாக மாற்றியது தான் அவர் கொடுத்த நல்ல மருந்து. ஒரு தகப்பன் தன்னுடைய பிள்ளைகள் இரட்சிக்கப்படவில்லையே என்று அநேக நாட்கள் வருத்தத்தோடு ஜெபித்துக்கொண்டு வந்தார். பல வருடங்கள் கழித்து கர்த்தர் அந்த பிள்ளைகளை இரட்சித்தார். அந்த தகப்பனின் வருத்தத்தை ஆனந்தமாக மாற்றினார். கர்த்தர் பிள்ளைகளை இராட்சித்தது தான் தகப்பனுக்கு கொடுத்த நல்ல மருந்து. உங்கள் புலம்பலையும் மாற்றி உங்களை மகிழ்ச்சியென்னும் கட்டினால் இடைக்கட்டுவார். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் (சங் 37:4). மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம் (நீதி 15:13) என்று வசனங்கள் சொல்லுகிறது. ஆகையால் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் நீங்கள் மகிழ்ச்சியாய் இருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org