கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார் (God will bless you from Zion).

வானத்தையும்  பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக (சங். 134:3).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/U0sHFZHy2TI

இஸ்ரவேல் ஜனங்கள் தேவனைத் தொழுது கொள்ள  எருசலேம் தேவாலயத்திற்குக் கடந்து வரும்போது ஆரோகண சங்கீதங்களைப் பாடிக் கொண்டு வருவார்கள். அவைகள் 120வது சங்கீதத்திலிருந்து 134 வரைக்கும் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறு அவர்கள் பாடிக்கொண்டு எருசலேம் தேவாலயத்திற்கு வரும்போது,       கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார் என்று கடைசி ஆரோகண சங்கீதத்தின் கடைசி வார்த்தையில் வாக்குத்தத்தமாக எழுதப்பட்டிருக்கிறது. சீயோன் என்பது தேவாலயத்தைக் குறிக்கிறது. எருசலேம் தேவாலயத்திலிருந்து மாத்திரமல்ல,      கர்த்தருடைய மணவாட்டியாகிய சபையிலிருந்தும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆசாரியர்களைக் கர்த்தர் நியமித்தின் நோக்கம் ஜனங்களை ஆசீர்வதிக்கும் படிக்காக. கர்த்தர் மோசேயைப் பார்த்து,      நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது,      அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது,      கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து,      உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி,      உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி,      உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்,      இவ்விதமாய்   என்நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் நீங்கள் கூறும்போது,      நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் கூறினார். ஆகையால் ஆலயத்தில் கூடிவந்து நாம் தேவனைச் சேவிக்கும் போது ஆலயத்தின் சம்பூரணத்தினால் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.

கர்த்தருயை ஜனங்களாகிய நாம்,      தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும்,      ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும்,      பரிசுத்த ஜாதியாயும்,      அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. நாம் அத்தனைப் பேரும் கர்த்தருடைய ஊழியக்காரர்களாய் காணப்படுகிறோம். கர்த்தர் சீயோனிலிருந்து நம்மை  ஆசீர்வதிக்கும் படிக்கு,      நாம் செய்ய வேண்டியது என்ன? இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நின்று கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்(சங். 134:1). பகல் காலத்திலும்,      இராக்காலத்திலும் கர்த்தரைத் துதிக்கும் துதி எப்போதும் நம் நாவில் காணப்பட வேண்டும். பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் ஊழியம் செய்து கொண்டு வந்த வேளையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து,      குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எதிர்ப்பட்டாள்.  அவள் இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்,      இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.  இப்படி அநேகநாள் செய்துகொண்டு வந்தாள். பவுல் சினங்கொண்டு,      திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி  இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்றான்,      அந்நேரமே அது புறப்பட்டுப் போயிற்று.  அதினிமித்தம் அவர்கள் அடிக்கப்பட்டு,      சிறைச்சாலையிலே வைக்கப்பட்டார்கள். அங்கே,      அவர்களை  உட்காவலறையிலே அடைத்து,      அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தார்கள். நடுராத்திரியிலே  பவுலும்  சீலாவும் ஜெபம் பண்ணி,      தேவனைத் துதித்துப்பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது. கடினமான சூழ்நிலையிலும் நடுராத்திரியில் தேவனை  ஸ்தோத்ததரித்து பாடினார்கள்,      உடனே விடுதலையையும் பெற்றார்கள். இந்நாட்களில் பகல் நேரத்தில் ஆலய ஆராதனைகளில் கூட நம்மால் கர்த்தரை ஸ்தோத்தரிக்க முடியவில்லை,      சத்தத்தை உயர்த்தி துதிக்க முடியவில்லை,      அவருடைய நாமங்களைச் சொல்லி அவரை மகிமைப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  

நம்முடைய கைகளைப் பரிசுத்த ஸதலத்திற்கு நேராக உயர்த்தியும் கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்(சங். 134:2).. கைகளைத் தேவனுடைய சமூகத்தில் உயர்த்துவது என்பது  பலிசெலுத்துவதற்கு  ஒப்பாகக் காணப்படுகிறது,      சங்கீதக்காரனாகிய தாவீது,      என் கையெடுப்பு அந்திப்பலியாக இருக்கக்கடவது என்று வேண்டினான். அது நாம் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்பதற்கு ஒப்பாகக் காணப்படுகிறது. புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி,      எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன் என்றும் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்,      கரங்களை உயர்த்துவது ஜெபம் பண்ணுவதற்கும் அடையாளமாய் காணப்படுகிறது. விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாம் சொன்னார்,      என் கைகளைக் கர்த்தருக்கு நேராக உயர்த்துகிறேன் என்று,      நீங்கள் உங்கள் கரங்களைக் கர்த்தருக்கு நேராக உயர்த்தும் போது,      ஒருநாளும் உங்கள் தேவைகளுக்காக மனுஷர்களுக்கு நேராய் நீங்கள் உங்கள் கரங்களை நீட்டக் கர்த்தர் அனுமதிக்க மாட்டார். நீங்கள் கரங்களை உயர்த்தி,      கர்த்தரைத் துதித்து,      ஆராதித்து,      ஜெபிக்கும் போது,      கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்,      ஆலயத்தின் நன்மையினால் நீங்கள் திருப்தியாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar