நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுப்பார் (God will give you the land of springs of water).

நியா 1:15. அப்பொழுது: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/LVpVxtfOlfs

காலேப் தன் குமாரத்தி அக்சாளை ஒத்னியேலுக்கு திருமணம் செய்து கொடுத்தான். அவர்கள் புறப்படும்போது கழுதையின் மேலிருந்த அக்சாள் தன் தகப்பனிடம் வயல்வெளியை கேட்கவேண்டும் என்று கீழே இறங்கினாள். தகப்பனாகிய காலேப் தன் குமாரத்தியை பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். நம்முடைய கர்த்தரும் நம்முடைய தேவைகளை அவரிடம் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். சிலர் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளாததற்கு காரணம் என்னுடைய தேவைகளை நான் சொல்லாமலே தேவனுக்கு தெரியும் என்று அவரிடம் கேட்காமல் விட்டுவிடுவது தான் என்பதை தேவ ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டும். குருடன் ஒருவன் இயேசுவிடம் வந்தான். இயேசு அவனிடம் நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். ஏன் இயேசுவுக்கு தெரியாதா, அவன் குருடனாய் இருக்கிறபடியால், அவன் பார்வையடைய விரும்புகிறான் என்பது இயேசுவுக்கு தெரியாதா? இருந்தாலும் அவன் கேட்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்த்தார். குருடன் நான் பார்வையடைய விரும்புகிறேன் என்று கேட்ட மாத்திரத்தில் அற்புதத்தை பெற்றுக்கொண்டான்.

அதுபோல தான் அக்சாள் தன் தகப்பன் காலேபிடம் எனக்கு ஒரு ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்டாள். காலேப் என்ன வேண்டும் என்று கேட்டான். அக்சாள் சொன்னாள் எனக்கு நீர் கொடுத்த நிலம் வறட்சியான நிலம் என்பதாக. ஏற்கெனவே காலேப் தன் குமரத்திக்கு கொடுத்த நிலத்தில் அவளுக்கு திருப்தி இல்லாமல் இருந்தது. அவள் கேட்காமல் கொடுத்தபோது காலேப் ஒரே ஒரு நிலத்தை கொடுத்திருந்தான். ஆனால் இப்பொழுது, தன் குமாரத்தி நீர்பாய்ச்சலான நிலம் வேண்டும் என்று குறிப்பிட்டு கேட்டுவிட்டாள்; அவளுக்கு கேட்டதை கொடுக்க வேண்டும் என்ற ஆவலோடு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். அவள் கேட்காமல் பெற்றுக்கொண்ட நிலம் ஒன்றே ஒன்று மாத்திரமே; ஆனால் இப்பொழுதோ அவள் பல நீர்பாய்ச்சலான நிலங்களை கேட்ட பிறகு பெற்றுக்கொண்டாள். உங்களுக்கும் கர்த்தர் நீர்பாய்ச்சலான நிலங்களை கொடுத்து ஆசீர்வதிப்பார். அவரிடத்தில் கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுவான். இடம் கொள்ளாமற் போகும் மட்டும் ஆசீர்வதிக்கிறவர். உங்கள் தேவைகள் அனைத்தையும் இயேசுவிடம் சொல்லிவிடுங்கள். நீங்கள் வறட்சியான நிலத்தில் வாசம்பண்ணுவது அவர் சித்தமல்ல. மாறாக, செழிப்பான நல்ல நிலங்களில் நீங்கள் வாசம் செய்ய வேண்டும் என்பதே அவருடைய வாஞ்சை. அக்சாள் தன் தகப்பன் காலேபிடம் கேட்டு, நீர்பாய்ச்சலான நிலங்களை பெற்றுக்கொண்டதுபோல, நீங்களும் நம் கர்த்தரிடம் நீர்பாய்ச்சலான நிலங்களை கேட்டு, பெற்றுக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org