பிலி 2 :9-11 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/29Hn-VmnFzw
இயேசுவின் நாமம் மேலான நாமம். எப்பொழுது அவருக்கு மேலான நாமம் கொடுக்கபடுகிறதென்றால், இதற்கு முந்தைய வசனம் சொல்லுகிறது, இயேசு மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் என்பதாக. இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி பிதாவுக்கு கீழ்ப்படிந்ததால் அவர் மேலான நாமத்தை பெற்றுக்கொண்டார். இயேசு என்னும் நாமத்திற்கு முன்பாக எல்லா முழங்காலும் முடங்கும்.
முதலாவது, வானோர் அதாவது வானமண்டலங்களில், பரலோகத்தில் இருக்கும் எல்லா தூதர்களின் முழங்காலும், இயேசு என்னும் மேலான நாமத்தை உடையவருக்கு முன்பாக முடங்கும். மிகாவேல் காபிரியேல் போன்ற பிரதான தூதர்களில் இருந்து, மற்றெல்லா தூதர்களும் இயேசுவை பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று சொல்லி ஆராதித்து கொண்டிருக்கிற அதே வேளையில், எல்லா முழங்காலும் இயேசுவுக்கு முன்பாக முடங்கி ஆராதிக்கிறவர்களாய் காணப்படுகிறார்கள். மாத்திரமல்ல, வானத்திலிருக்கும் வேறெந்த சத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும் மேலான நாமத்தை உடைய இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிடும்.
இரண்டாவதாக, பூதலத்தோர் அதாவது பூமியில் மேற்கிலிருந்து கிழக்கு வரைக்கும், வடக்கிலிருந்து தெற்கு வரைக்கும் இருக்கும் சகல ஜனங்களின் முழங்காலும் மேலான நாமத்தை உடைய இயேசுவின் நாமத்திற்கு முன்பாக முழங்கால்படியிடும். பூமியில் இருக்கும் சகல இராஜாக்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள் துவங்கி, கடைமுனையில் இருக்கும் சாதாரண மனிதன் வரைக்கும் இருக்கும் எல்லா மனிதர்களின் முழங்காலும் மேலான நாமத்தை உடைய இயேசுவுக்கு முன்பாக முடங்கும். பூமியில் மிகவும் வயதான மனிதன் துவங்கி கடைசியில் பிறந்துகொண்டிருக்கும் பிள்ளைகள் வரைக்கும் எல்லா முழங்காலும் மேலான நாமத்தை உடைய இயேசுவுக்கு முன்பாக முடங்கும். உங்களுக்கு விரோதமாக யாரவது எழும்புகிறார்களா, உடனடியாக மேலான நாமத்தையுடைய இயேசுவின் நாமத்தை மகிமைபடுத்துங்கள். எதிராக எழும்புகிறவர்கள் யாராக இருந்தாலும் முழங்கால்படியிட்டே ஆவார்கள்.
மூன்றாவதாக, பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் மேலான நாமத்தையுடைய இயேசுவுக்கு முன்பாக முடங்கும். சிலருக்கு செத்த ஆவிகள், செத்த ஆட்கள், பாதாளத்தின் வல்லமைகள், பேய்கள், பிசாசுகள், அசுத்த ஆவிகள் என்றால் பயம் வருகிறது. தேவ ஜனங்கள் ஒன்றை அறிந்துகொள்ள வேண்டும் இந்த எல்லா பாதாளத்தின் வல்லமைகளின் முழங்காலும், மேலான நாமத்தையுடைய இயேசுவுக்கு முன்பாக முடங்கும். மேலான நாமத்தையுடைய இயேசுவின் நாமத்தை சத்தமாக நீங்கள் உச்சரிக்கும்போது, பாதாளத்தில் இருக்கும் எந்த அசுத்த ஆவிகளாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் இயேசு என்னும் நாமத்தை கேட்டு நடுங்கும், மண்டியிடும்.
இப்படியாக மூன்று உலகத்தில் இருக்கும் அத்தனைபேரும் மேலான இயேசுவின் நாமத்திற்கு முன்பாக முடங்கும். அப்படிப்பட்ட மேலான நாமத்தையுடையவரை தெய்வமாக கொண்டிருப்பது நமக்கு கிடைத்த பெரிய சிலாக்கியமாய் காணப்படுகிறது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org