அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம், ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு (எஸ்றா 10:2).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9fl_s4brH9Y
பாபிலோனியச் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் செருபாபேலின் தலைமையின் கீழ், நேபுகாத்நேச்சாரால் சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட தேவாலயத்தைக் கட்டுபடிக்குத் திரும்ப வந்தார்கள். அதை திரும்ப எடுத்துக்கட்ட கர்த்தர் அவர்களுக்கு அனுகூலம் பண்ணினதினால், ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கே காணப்பட்ட புறஜாதிகளாகிய கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள். இப்படியே பரிசுத்த வித்துத் தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று. இந்தக் குற்றத்தை ஆசாரியர்களும், லேவியரும், பிரபுக்களும், அதிகாரிகளும் செய்தார்கள். இது கர்த்தருடைய பார்வையில் பெரிய பாவமாகக் காணப்பட்டது. நோவாவின் நாட்களில் இந்தப் பாவத்தின் நிமித்தமாகக் கர்த்தர் தேசத்தை வெள்ளத்தினால் அழித்தார் என்று ஆதி.6:1-7ல் வாசிக்கிறோம். கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருநாளும் தேவனுடைய காணியாட்சிக்குத் தூரமானவர்களையும், உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஏற்ற துணையாகக் காணப்படாத நபர்களையும் விவாகம் செய்து விடாதிருங்கள், அப்படிச் செய்வது ஆண்டவருடைய பார்வையில் மிகவும் பாவமாகக் காணப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், செருபாபேலுக்கு பின்பாக சுமார் எண்பது வருடங்கள் கழிந்து எஸ்றா என்ற உத்தம வேதபாரகன், அர்தசஷ்டா என்ற ராஜாவின் நாட்களில் பாபிலோனிலிருந்து ஒரு கூட்ட ஜனங்களோடு கூட எருசலேமிற்கு கடந்து வந்தான். அவன் கடந்து வந்ததின் நோக்கம் சிறையிலிருப்பிலிருந்து மீண்டு வந்த ஜனங்களுக்கு வேதவார்த்தைகளைக் கற்றுக் கொடுத்து அவர்களைக் கர்த்தருக்குள் நடத்துவதற்காக. ஆனால் எருசலேமில் வந்தபின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய ஸ்தீரிகளை விவாகம் செய்து, அவர்களுடைய பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும், தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்திருப்பதைக் கண்டு, கர்த்தருடைய சமூகத்தில் அழுது தாழவிழுந்து, அப்பம் புசியாமலும் தண்ணீர்குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தான். அந்தவேளையில் யெகியேலின் குமாரன் செக்கனியா என்பவன் எஸ்றாவை நோக்கி இந்தக் காரியத்தில் இஸ்ரவேலுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு என்று கூறி, புறஜாதிகளை எங்களைவிட்டு அகற்றிப்போடுவோம் என்று உடன்படிக்கைச் செய்து, கர்த்தருக்கு முன்பாக அப்படியே செய்தார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலும் கூட அனேக தேவனுக்குப் பிரியமில்லாதக் காரியங்களைச் செய்து, பாவங்களில் விழுந்துபோய் வாழ்ந்து கொண்டு காணப்படக் கூடும். இனி என் வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லை என்ற நிலையில் காணப்படலாம். பாவத்தின் பாரத்தையும், சாபத்தையும் சுமந்து சோர்ந்து போய் காணப்படலாம். ஆண்டவர் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டு என்று கூறுகிறார். துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தில் மரிப்பது ஆண்டவருடைய சித்தமல்ல, எல்லோரும் மனம் திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆகையால் கர்த்தரண்டை திரும்பி வந்துவிடுங்கள். இளையக் குமாரனைப் போல, நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய், தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன் என்று திரும்பி வந்தது போல, பரம தகப்பனிடம் வந்து விடுங்கள். அவர் உங்களை மன்னித்து, சேர்த்துக் கொள்ளுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar