பிணியாளிகளுக்கு வைத்தியன் (Physician for those who are weak and sick)

மாற் 2:17. இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4gp5Nmumocs

ஒருமுறை இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணிக்கொண்டிருந்தார். அதை பார்த்துக்கொண்டிருந்த வேதபாரகரும் பரிசேயரும் எப்படி இயேசு ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணலாம், இது தகாத காரியம் என்று இயேசுவின் சீஷர்களிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு சொன்னார் சுகமுள்ளவர்களுக்கு வைத்தியன் தேவை இல்லை. நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்கள், ஒரு நோயும் இல்லாதவர்கள் வைத்தியரிடம் செல்லமாட்டார்கள். மாறாக பிணியாளிகளுக்கே வைத்தியன் தேவை என்று இயேசு சொன்னார்.

இப்பொழுது இருக்கிற காலத்தில் ஒவ்வொரு வியாதிகளை பார்க்க தனி சிறப்புமிக்க வைத்தியர்கள் உண்டு. உதாரணத்திற்கு பல் வலி என்றால் பல் மருத்தவரிடத்திற்கும், எலும்பில் பிரச்னையென்றால் எலும்பு முறிவு மருத்தவரிடத்திற்கும், புற்றுநோய் என்றால் அதற்கான புற்றுநோய் மருத்தவரிடத்திற்கும் சென்று வைத்தியம் பார்ப்பதுண்டு. ஆனால் எல்லா நோய்களையும் தீர்த்துவிட ஒரு விசேஷித்த ஒரு மருத்துவர் உண்டு என்றால் அது இயேசு கிறிஸ்து மாத்திரமே. அவராலே மாத்திரமே எல்லா நோய்களுக்கும் விலக்கி சுகத்தை தரமுடியும். காரணம் அவர் பரம வைத்தியர்; யெகோவா ராப்பா என்பது அவருடைய நாமம்; அவர் பரிகாரியாகிய கர்த்தர்; ரண வைத்தியர்.

மாத்திரமல்ல, இயேசு பாவிகளின் சிநேகிதன் என்று அழைக்கப்பட்டார். ஆகையால் தான் இயேசு பாவிகளிடம் அருகில் உட்கார்ந்து அவர்களோடு கூட போஜனம் செய்தார். அவர்கள் மனம் திரும்பி இரட்சிக்கப்பட்டு இயேசுவோடுகூட என்றென்றும் இருக்கும்படியாக செய்யவேண்டும் என்பதற்காகவே.

யாரையும் பாவி என்று சொல்லி நாம் நிராகரிப்பவர்களாக தேவபிள்ளைகள் இருக்கலாகாது. அவர்களை நேசிக்க வேண்டும்; அவர்களோடு பேச வேண்டும்; அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்; அப்படி செய்பவர்கள் தான் கிறிஸ்துவின் சிந்தையை தரித்தவர்கள். மாறாக இன்று அநேக கிறிஸ்துவர்கள், அவன் ஒரு குடிகாரன், அவன் ஒரு விபச்சாரக்காரன், அவன் ஒரு திருடன் என்று சொல்லி அவர்களை ஊதாசீனப்படுத்துகிறவர்களாய் காணப்படுகிறார்கள்.

இயேசுவால் எந்த மனிதனையும் பிரகாசிக்க செய்ய முடியும்; எந்த மனிதனையும் இரட்சிக்க முடியும்; எவ்வளவு பெரிய கல்நெஞ்சம் படைத்தவர்களையும் இலகும்படி செய்ய முடியும்.

ஆகையால் பிணியாளிகளை இயேசுவுக்கு நேராக அழைத்து கொண்டு வாருங்கள். பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லுங்கள். அவர்களுக்காகவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். ஒரு பாவி மனம் திரும்பினால் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டு என்று வேதம் சொல்லுகிறது. உங்கள் நிமித்தமாக பரலோகம் சந்தோசப்பட செயல்படுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org