அல்பாவும் ஒமெகாவுமானவர் (Alpha and Omega).

வெளி 22:13 நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/bgRSK1Q8j0g

நம்முடைய வாழ்க்கையில் கர்த்தர் துவக்கமும் முடிவுமாயிருக்கிறார். யோபுவின் நண்பனாகிய சூகியனான பில்தாத் யோபுவைப் பார்த்து சொன்னான், உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும் (யோபு 8:7) என்று. ஆகாய் தீர்க்கத்தரிசி சொல்லுவான் முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (ஆகாய் 2:9) என்பதாக. ரூத்தை குறித்து சொல்லும்போது அவளுடைய முந்தின நற்குணத்தை பார்க்கிலும் அவளுடைய பிந்தின நற்குணம் உத்தமமாயிருந்தது என்று வேதம் சொல்லுகிறது. அதுபோல உங்கள் முடிவும் ஆசீர்வாதமாக சம்பூரணமாக இருக்கும்.

யோபுவை கர்த்தர் எப்படி ஆசிர்வதித்தார் என்றால், கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின (யோபு 42:12) என்று வசனம் சொல்லுகிறது. அவனுக்கு மீண்டும் இழந்துபோன பத்து பிள்ளைகளை கொடுத்து ஆசீர்வதித்தார். ஏழு குமாரர்களையும், மூன்று குமாரத்திகளையும் பெற்றெடுக்கும்படி கர்த்தர் செய்தார். ஏழு என்றால் அது பூரணத்தை குறிக்கிறது. கர்த்தர் யோபுவை பரிபூரணமாக ஆசிர்வதித்தார். அதுபோல கர்த்தர் உங்களையும் பரிபூரணமாக ஆசீர்வதிப்பார். மூன்று என்றால் அது தெய்வீகத்தை குறிக்கிறது. கர்த்தர் யோபுவை பரிபூரணமாக ஆசிர்வதிக்கும்போது, தெய்வீகத்தன்மை இருந்தது. அதுபோல உங்களையும் திரியேக தேவனின் சித்தத்தின்படி ஆசீர்வதிப்பார். இப்படியாக பத்து பிள்ளைகளை பெற்றெடுத்தான். பத்து என்பது முழுமையை குறிக்கிறது. கர்த்தர் யோபுவை ஆசிர்வதிக்கும்போது முழுமையாக ஆசிர்வதித்தார். அதுபோல உங்களையும் கர்த்தர் முழுமையாக ஆசீர்வதிப்பார். அல்பாவும் ஒமெகாவுமானவர் உங்கள் வாழ்க்கையிலிருக்கும்போது உங்கள் பின்னிலைமை ஆசிர்வதிக்கப்படும்.

பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் (எபி 1:1-2) என்ற வசனத்தின்படி, பூர்வகாலம் என்பது அல்பா அதாவது துவக்கமாய் காணப்படுகிறது. இந்த கடைசி நாட்கள் என்பது ஒமேகா அதாவது அந்தமாய் காணப்படுகிறது. ஆகையால் தான் சகரியா சொல்லும்போது, பின்மாறி மழைக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்பதாக. முன்மாரிமழை ஆதி அப்போஸ்தலர்களின் நாட்களில் பெய்தது. அதுபோல பின்மாறிமழை கடைசி நாட்களில் ஆவியானவர் ஊற்றப்படுகிற காலமாய் காணப்படுகிறது. அல்பாவும் ஒமெகாவுமானவர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக முன்மாரிமழையை ஊற்றியதுபோல, பின்மாரிமழையை இந்நாட்களில் ஊற்றுவார். உங்கள் வாழ்க்கையிலும், குடும்பத்திலும், சபையிலும் அல்பாவும் ஒமெகாவுமானவர், ஆதியும் அந்தமுமானவர், முந்தினவரும் பிந்தினவருமாயிருமானவர் பின்மாரிமழையை ஊற்றுவார்; உங்கள் வாழ்க்கையில் பின்னிலைமை ஆசிர்வதிக்கப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org