உன் எல்லைக்குள் கர்த்தர் வாசமாயிருப்பார் (God will dwell within your borders).

பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன்,     அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான், அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி,     அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்(உபா. 33:12).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/JB5PyxU7B2M

யாக்கோபின் பன்னிரண்டு குமாரர்களும்,     பின்னாட்களில்  இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாய் மாறினார்கள். அவர்களுக்குள் பென்யமீன் கோத்திரம் மிகச் சிறியதாகக் காணப்பட்டது. அப்படிப்பட்ட ஒரு சிறிய கோத்திரத்தின் எல்லைக்குள் கர்த்தர் வாசமாயிருப்பேன் என்று வாக்குக் கொடுத்தார். 

பென்யமீன் பிறக்கும் போது அவனுடைய தாயாகிய  ராகேல் மரிக்கும்  தருவாயில் இருந்தாள்,     அப்போது அவனுக்கு பெனொனி என்ற பெயரை வைத்தாள்,     அதற்குத்   துக்கத்தின் மகன் என்பது அர்த்தம். ஆனால் பின்னாட்களில் அவன் கர்த்தருக்குப் பிரியமானவனாய் மாறினான். அவன் கோத்திரத்திலிருந்து எகூத் என்ற நியாதிபதி தோன்றி கர்த்தருக்காய் வைராக்கியம் பாராட்டினான். இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுலும் பென்யமீன் கோத்திரத்தான். மொர்தேகாயும்,     எஸ்தரும் கூட பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். சபைக்கு நிருபங்களை எழுதிக் கொடுத்த அப்போஸ்தலனாகிய  பவுலும் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். தேவனுடைய ஆலயம் கட்டப்பட்ட  எருசலேம்  பட்டணமும் பென்யமீன் கோத்திரத்தின் காணியாட்சியைச் சேர்ந்தது. இப்படிப்பட்ட அனேக மேன்மைகளை  கர்தத்தர் கொடுத்ததின் காரணம்,     யுத்தம் என்று வந்து விட்டால்,     பெனயமீனைச் சேர்ந்தவர்கள் முன்னிற்பார்கள்.  தெபோராளின் நாட்களில் சிசேரா பெரிய சேனையோடும்,     ரதங்களோடும் யுத்தத்திற்கு வந்தான். அந்த வேளையில்  ரூபன் கோத்திரம் பிரிந்து நின்றது,     தாண் மனுஷர்களும்,     ஆசேர் மனுஷர்களும் தங்கள் இடங்களில் தங்கி தாபரித்தார்கள். ஆனால் பென்யமீன்  மனுஷர்கள் தெபோராளையும்,     பாரக்கையும் பின்பற்றி யுத்தத்தில் முன் நின்றார்கள்.  ஆசாவின் நாட்களில் அவனோடே கூட பென்யமீன்  கோத்திரத்தைச் சேர்ந்த இரண்டு லட்சத்து என்பதினாயிரம் இராணுவ வீரர்கள் காணப்பட்டார்கள். அனேக வேளைகளில் யூதாவோடு சேர்ந்து  பென்யமீன் ஜனங்களும் யுத்தத்தில் முன்னின்றார்கள். ஆகையால்  பென்யமீன் கர்த்தருக்குப் பிரியமானவனாய் காணப்பட்டான். அவன் எல்லைக்குள் கர்த்தர் வாசமாயிருக்க விரும்பினார்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் கர்த்தருக்காக நிற்கும் போது,     அவர் உங்களுக்காக நிற்பார். அவருடைய காரியங்களுக்காய் நீங்கள் வைராக்கியம் பாராட்டும் போது,     அவர் உங்களுக்காக வைராக்கியம் பாராட்டுவார். அவர் உங்கள் எல்லைக்குள்ளே வாசம் பண்ணுவார்,     தேவன் உங்கள் குடும்பத்தின் எல்லைக்குள் வாசம் பண்ணும் போது,     உங்கள் குடும்பத்தில் சமாதானமும்,     சந்தோஷமும்,     ஆசீர்வாதமும் காணப்படும். அவருடைய பிரியம் உங்கள் மேலிருக்கும்,     உங்களை அவர் எந்நாளும் காப்பாற்றி,     உங்களைச் சுகமாய் தங்கியிருக்கும் படிக்குச் செய்வார். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar