சங் 106:9. அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2Splq4w1VTc
ஒரு வகுப்பறையில் இரண்டு மாணவர்கள் புத்தகத்தை முகத்தில் மூடி, ஆசிரியருக்கு தெரியாமல் நகைத்துக்கொண்டும் விளையாடிகொண்டும் இருந்தார்கள். தூரத்தில் பார்த்த ஆசிரியர் மெதுவாக அந்த மாணவர்களுக்கு தெரியாமல் பின்னால் நின்று சத்தமாக டேய் என்று அதட்டினார்கள். உடனே அந்த இரண்டு மாணவர்களும் திடுக்கிட்டு ஆசிரியர்க்கு பயந்து நடுங்கினார்கள். அதுபோல தான் பிசாசை நாம் இயேசுவின் நாமத்தில் அதட்டும்போது எவ்வகையான பிசாசுகளும் பயந்து நடுங்கும்.
இஸ்ரவேல் ஜனங்கள் பார்வோனுக்கு முன்பாக செல்லும்போது எப்பக்கமும் அடைக்கப்பட்ட சூழ்நிலைகள் உண்டானது. முன்னால் செங்கடல் வழிவிடாமல் அடைத்துக்கொண்டிருந்தது. இப்படித்தான் சத்துரு பல சந்தர்ப்பங்களில் பலவிதமான சூழ்நிலைகளை நமக்கு எதிராக கொண்டுவருவான். குறிப்பாக தேவ ஜனங்களுக்கு விரோதமாக பல எதிர்மறையான சூழ்நிலைகளை கொண்டுவருவான்.
இயேசு இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்தார்? அவர் செங்கடலை பார்த்து அதட்டினார். ஒருமுறை சீஷர்களுடன் இயேசு படகில் கடந்து செல்லும்போது காற்றும் கடலும் எதிர்சூழ்நிலையை உண்டாக்கியது. அப்பொழுது இயேசு எழுந்து சீறிக்கொண்டிருந்த காற்றையும் கடலையும் அதட்டினார். சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்பட்ட ஒருவனை இயேசுவினிடம் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவனுக்குள் இருந்த பிசாசை இயேசு அதட்டினார். ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். இயேசு அதை பார்த்து அதட்டினார். இயேசு ஒருமுறை அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். இப்படி அநேக இடங்களில் இயேசு சத்துருவையும், அவன் கொண்டு வரும் எதிர் சூழ்நிலைகளையும் பார்த்து அதட்டினார்.
நமக்கும் அநேக எதிர்மறையான சூழ்நிலைகளை சத்துரு கொண்டுவருவான். வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்கும்போது, ஊழியத்தின் பாதையில், உற்றார் உறவினர்கள் மூலம் என்று பல்வேறு மனிதர்கள் மூலம் எதிர்சூழ்நிலைகளை சத்துரு கொண்டுவருவான். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஐயோ என்ன செய்வது என்று பயந்துவிடாமல், அந்த சூழ்நிலைகளை இயேசுவின் நாமத்தில் அதட்டுங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். ஆகையால் எப்படிப்பட்ட நெருக்கங்கள், கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் பயந்துவிடாமால், திகைத்துவிடாமல், இயேசுவின் நாமத்தில் அவனை அதட்டுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org