நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன் (I will go before you and make the crooked places straight).

கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி,  ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள்  பூட்டப்படாதிருக்க, கதவுகளைத்திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா 45:1,2.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/tbRRBNH2HWE

பெர்சிய ராஜாவாகிய கோரேசுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தமாகக் காணப்படுகிறது. நம்மைப் பார்த்தும் கர்த்தர் சொல்லுகிறார், நான் உங்களுக்கு முன்பாக போவேன், உங்களுக்கு முன்பாகக் கோணலானவைகளாய் காணப்படுகிற எல்லாகாரியங்களையும் செம்மைப் படுத்துவேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார்.

நம்முடைய தேவன் நமக்கு முன்பாக நடந்துசெல்லுகிறவர். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில் அவர்களுக்கு முன்பாக அக்கினி ஸ்தம்பமாய், மேகஸ்தம்பாக முன்சென்றார் (யாத். 13:21). ஒரு எதிரிகளும் அவர்களுக்கு முன்பாக நிற்கமுடியவில்லை. ஒருகுறைவும் இல்லாதபடி அவர்களை நடத்தினார். அவர்களைப் போஷித்தார், அவர்களை உடுத்திவித்தார், கண்மணிபோல காத்தருளினார். அவருடைய மந்தையின் ஆடுகளாகிய நமக்கு முன்பாக நடந்துசெல்லுவார் (யோவான் 10:4), சேனாதிபதியாக நமக்கு முன்பு கடந்துசென்று யுத்தம்செய்வார். என் சமூகம்  உனக்கு முன்பாகச் செல்லும், என் தயையை எல்லாம் உனக்கு முன்பாக கடந்து போகப்பண்ணுவேன் என்று சொன்னவர், அவருடைய தயையை உங்களுக்கு முன்பாக கடந்துபோகப்பண்ணி உங்களுக்குத் தயவும் இரக்கமும் பாராட்டுவார்.

கர்த்தர் உங்களுக்கு முன்பாக கடந்துசெல்லும்போது, கோணலானவைகள் எல்லாம் செம்மையாகும். லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பம் என்று வேதம் பிசாசை அழைக்கிறது (ஏசாயா 27:1). பிசாசு கோணல்களை உண்டுபண்ணுகிறவன். பாதைகளை கடினப்படுத்துகிறவன். குடும்ப வாழ்க்கைகளில் கோணல்களைக் கொண்டுவருகிறவன், தடைகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குகிறவன், எளிதாக மேற்கொள்ளக்கூடிய காரியங்களைக் கூட கடினப்படுத்துகிறவன். எண்ணங்கள், நினைவுகளில் தாறுமாறுகளை உண்டுபண்ணுகிறவன். ஆனால் கர்த்தர் உங்களுக்கு முன்பாக போகும்போது பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும், காரணம் அவர் எல்லாவற்றையும் செவ்வையாக்குகிற தேவன்.

அவர் உங்களுக்கு முன்பாக போகும்போது வெண்கல கதவுகள் உடையும், இருப்புத்தாழ்ப்பாழ்கள் முறியும், அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உங்களுக்க கொடுப்பார். தடைபட்டுப் போன எல்லா ஆசீர்வாதங்களையும் கர்த்தர் உங்களுக்குத் திரும்பத்தருவார். நீங்கள் காத்திருக்கும் காரியங்களில் ஜெயத்தைக் கட்டளையிடுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org