அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (By His wounds we are healed).

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் (ஏசாயா 53:5).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/5mrlxKD5e2g

ஏசாயா தீர்க்கத்தரிசி, கிறிஸ்துவுக்கு முன்பு, 700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். கிறிஸ்துவின் பிறப்பு, ஊழியம், பாடு, மரணத்தைக் குறித்து அதிகமாய் முன்னறிவித்தவர்.  இயேசுவினுடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம் என்றும் முன்னறிவித்தார். பேதுரு அப்போஸ்தலன் இதைக் குறித்துக் கூறும்போது, நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார், அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1 பேதுரு 2:24).

இரண்டு விதங்களில் ஒவ்வொருவரும் குணமாகவேண்டும், முதலில் ஆத்துமா குணமாகவேண்டும், இரண்டாவது சரீரம் குணமாகவேண்டும். ஆத்துமாவில் உண்டாகும் குணமானது, சரீர பிரகாரமான சுகத்தைக் காட்டிலும் மேன்மையானது. மனுஷனைக் கர்த்தர் ஆவி, ஆத்துமா, சரீரமாகச் சிருஷ்டித்தார். நாம் மரிக்கும் போது என்ன நடக்கும், ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு போகும், சரீரம் மண்ணாயிருப்பதினால் மண்ணுக்குப் போகும், ஆத்துமா நித்தியத்தை நிர்ணயிக்கும். நித்திய நரகமா அல்லது நித்திய மோட்சமா என்பது ஆத்துமாவில் உண்டாகும் கர்த்தருடைய தொடுதலை, இரட்சிப்பைப் பொறுத்ததாய் காணப்படுகிறது.   ஆகையால் தான் சரீர சுகத்தைப் பார்க்கிலும் ஆத்துமாவில் உண்டாகும் சுகம் அதிக முக்கியமானது.

நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் இயேசு காயப்பட்டார். தவறு என்று அறிந்திருந்தும், அதை மீண்டும் செய்வது தான்  மீறுதலாய் காணப்படுகிறது.  நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்  புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று ஆதாமுக்குக் கட்டளையிட்டார். அதை அறிந்திருந்தும் மனைவியின் வார்த்தையின்படி விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்தான், இது கர்த்தருடைய பார்வையில் மீறுதலாய் காணப்படுகிறது, அவனுடைய ஆத்துமாவில் அன்றே மரணம் வந்தது. ஆகையால் தான் ஆதாமுக்குள் பிறக்கிற அத்தனை பேரும் பாவத்தில் பிறக்கிறார்கள். நமக்குக் கர்த்தருடைய இரட்சிப்பின் தொடுதல் அவசியம். ஆகையால் தான் இயேசு தன்னுடைய சரீரத்தில் காயங்களை ஏற்றுக்கொண்டார். அதுபோல நம்முடைய அக்கிரமங்கள் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். அக்கிரமம் என்பது நம்முடைய பாவங்களாய் காணப்படுகிறது. நமக்குப் பாவமில்லை என்போமேயானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறோம். பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் வேதம் எச்சரிக்கிறது. நம்முடைய அக்கிரமங்கள் மீறுதல்களின் நிமித்தம் இயேசு நொறுக்கப்பட்டார். மனுகுலத்தின் மீறுதல்களும் அக்கிரமங்களும் இயேசுவின் முழுச் சரீரத்தையும் காயப்படுத்தினது. உழுகிறவனுடைய படைச்சால்கள் போல அவருடைய சரீரம் காயங்களால் நிறைந்து காணப்பட்டது. வாரினால் அடித்ததினால் உண்டான காயங்கள், முள்முடியினால் உண்டான காயங்கள், ஆணிகளினால் அடிக்கப்பட்டதினால் உண்டான காயங்கள், ஈட்டியினால் உண்டான காயம் என்று முழு சரீரமும் காயங்களால் நிறைந்திருந்தது. அவருடைய காயங்கள், அதிலிருந்து பாய்ந்தோடுகிற இரத்தம்,  பாவம் என்னும் குஷ்டத்திலிருந்து  நம்மை முழுவதுமாக கழுவி, நம்முடைய ஆத்துமாவைக் குணப்படுத்தி இரட்சிப்பதற்கு போதுமானதாக காணப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் காயங்கள் நம்முடைய வியாதிகளிலிருந்தும் நமக்கு விடுதலையைத் தருகிறது. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் (ஏசாயா 53:4). சிலுவையைச் சுமந்த ஆண்டவர், வியாதிகளினால் உண்டாகும் பாடுகளையும் துக்கங்களையும் கூட சுமந்தார். அவருடைய தழும்புகள் அதற்கும் அடையாளமாய் காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலைத்தாண்டி இக்கரைப் பட்ட பின்பு, மூன்றுநாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது, மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்;  அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:  நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார் (யாத். 15: 22-26). சிலுவை நாதர் வியாதிகளினால் உண்டாகும் கசப்புகளை நீக்கி நம்மைக் குணமாக்க வல்லவர்; அதற்காகவும் அவர் தன் சரீரத்தில் தழும்புகளை ஏற்றுக்கொண்டார். கர்த்தருடைய தழும்புகளால் உங்கள் ஆத்துமாவும் சரீரமும், குணமடைவதாக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar