தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்(Whoever humbles himself shall be exalted):-

லூக்கா 18:14. அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/biYcaA8tyrQ

பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபம் செய்யும்படி தேவாலயத்திற்கு போனார்கள். பரிசேயனுடைய ஜெபம் தன்னை குறித்தும், அவனுடைய புகழ்ச்சியை குறித்தும், தன்னை நீதிமானாக காட்டிக்கொள்வதைப்போலவும் இருந்தது. அவன் சொன்னான் நான் உபவாசிக்கிறேன், தசமபாகம் செலுத்துகிறேன், ஜெபம் செய்கிறேன் என்பதாக. ஆனால் ஆயக்காரன் அதாவது வரி வசூலிப்பவன் தான் ஒரு பாவி என்றும், தன்னுடைய பாவத்திற்காக தன்னை தாழ்த்துகிறவனாகவும் ஜெபம் செய்தான். ஆண்டவர் பரிசேயனையல்ல; மாறாக ஆயக்காரனையே நீதிமானாக கண்டார். முடிவில் ஆயக்காரனே உயர்த்தப்பட்டான்.

ஒரு சபை ஊழியக்காரரிடம் ஒரு விசுவாசி கோபமுடன் வந்து நான் நன்றாக ஜெபிக்கிறேன், ஆனால் எனக்கு எந்த வாய்ப்பும் சபையில் தராததால் நான் சபைக்கு வருவதை தவிர்த்து வேறு சபைக்கு போகப்போகிறேன் என்று சொன்னார். அதே நாளில் வேறொரு விசுவாசி அந்த ஊழியக்காரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஐயா எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்; நான் இயேசுவுக்கு விரோதமாக பாவம் செய்துவிட்டேன் என்பதாக. நான் வேண்டாத உலக நட்பை வளர்த்துக்கொண்டுவிட்டேன்; இயேசுவை விட்டு தூரத்தில் சென்றுவிட்டேன்; இப்பொழுது இயேசு என் பாவத்தை மன்னிக்கும்படியாக ஜெபித்துக்கொள்ளுங்கள் என்பதாக. நாளின் இறுதியில் இந்த ஊழியக்காரர் நடந்த இரண்டு சம்பவங்களையும் தன்னுடைய தனி ஜெபத்தில் வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார். அப்பொழுது ஆண்டவர் சொன்னார் பேதுரு என்னை மறுதலித்துவிட்ட பின் மனம் வருந்தி அழுது ஒப்புரவாகினான்; பின்னர் அவனையே நான் அதிகமாக பயன்படுத்தினேன். ஆகையால் தன்னை பாவி என்று ஒப்புக்கொண்டு வந்த அந்த விசுவாசியை நான் நீதிமானாக்குகிறேன் என்பதாக.

இப்படிப்பட்ட முதல் விசுவாசியை போல தேவ பிள்ளைகளாகிய நாம் ஒருபோதும் முரு முறுகிறவர்களாக சபையில் நாம் காணப்படலாகாது. அது ஆவிக்குரிய பெருமையாக கர்த்தருடைய பார்வையில் காணப்படும். ஆவிக்குரிய பெருமை ஒருவனுக்கு வந்துவிட்டால், பின்பு கர்த்தரிடம் திருப்புவது கடினமாகிவிடும். ஆகையால் நம்மை நாம் தாழ்த்துகிறவர்களாக காணப்படுவோம்.

சபையிலுள்ள சகோதர சகோதிரிகளை கணம் பண்ணுவதில் முந்திக்கொள்ளுங்கள்; நற்சீர் பொருந்துங்கள்; மேட்டிமைகளை கலைதெரிந்து தாழ்மையின் சிந்தையை தரித்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நிச்சயமாக உயர்த்தப்படுவீர்கள்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத் 5:3) என்று வசனம் சொல்கிறது. ஆயக்காரன் ஆவியில் எளிமையுள்ளவனாக காணப்பட்டான். ஆகையால் உயர்த்தப்பட்டான்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org