ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத். 6:26).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/fzVTQtZ6Gws
இந்த பூமியில் கவனித்துப் பார்க்கத் தக்க முன்மாதிரியின் ஜீவியம் செய்தவர் இயேசு ஒருவரே. ஆகையால் பரம அழைப்புக்குப் பங்குள்ள நாம் எல்லோரும் கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப் பார்க்கும் படிக்கு வேதம் கூறுகிறது. அது போலக் கவலைப்படாத ஜீவியம் நாம் செய்வதற்கு, காகத்தைப் போன்ற ஆகாயத்துப் பறவைகளைக் கவனித்துப் பார்க்கும்படி கர்த்தர் கூறுகிறார். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, ஆனால் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார், அவைகளுக்கு ஒரு குறைவும் இல்லாதபடிக்கு அனுதினமும் கர்த்தர் போஷிக்கிறார். ஆண்டவருடைய சாயல் இல்லாத உயிரினங்களைக் கர்த்தர் போஷிக்கும் போது, அவருடைய பிள்ளைகளாகிய நம்மைக் கர்த்தர் போஷிப்பதும், உடுத்துவிப்பதும் அதிக நிச்சயமாய் காணப்படுகிறது, ஆகையால் கவலைப் படாதிருங்கள்.
ஒருமுறை ஆண்டவர் பெத்தானியாவிற்கு வந்த வேளையில், அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள், அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். இதிலிருந்து ஒருவன் எப்போது ஆண்டவருடைய பாதத்தில் அமராமல், அவருடைய பிரசன்னத்தை இழக்கிறானோ, அப்போது கவலை அவனை ஆக்கிரமிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னொருமுறை இயேசு சீஷர்களைப் பார்த்து, அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். இயேசுவும் அவர்களோடு படவிலிருந்தார். அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்க தாக, அலைகள் அதன்மேல் மோதிற்று. இயேசு கப்பலின் பின்னணியத்தில் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அப்போது அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். நம்முடைய வாழ்க்கையில் விசுவாச குறைச்சல் வரும் போதும் கவலை நம்மைச் சூழ்ந்துகொள்ளுகிறது. விசுவாசம் வேத வசனத்தைக் கேட்பதினால் வரும் என்று வேதம் கூறுகிறது. வசனங்களைக் கேட்டும் உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை முட்களைப் போல நெருக்கிப் போடுகிறதினால் அனேக இருதயங்களில் வசனம் கிரியைச் செய்யாமல் பலனற்றதாக போகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே. நாம் கவலைப் படுவதினால் நம்முடைய சரீர அளவில் ஒரு முழத்தை நம்மால் கூட்ட முடியாது. கவலைப் படுவதினால் நாம் பலவீனம் அடைவோமே ஒழிய அதனால் ஒரு நன்மையும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை. ஆகையால் உங்களை விசாரிக்கக் கர்த்தர் மேல் உங்கள் பாரங்கள், தேவைகள், குறைவுகள் எல்லாவற்றையும் சுமத்தி வைத்துவிட்டு உங்களை இலகுவாக்கிக் கொள்ளுங்கள் என்று வேதம் கூறுகிறது. பாரமானதும், வலிநிறைந்ததும், கொடூரமுமான சிலுவையைச் சுமந்து உங்களுக்காகக் காயங்களை ஏற்றுக் கொண்டவர், உங்கள் எல்லாவித கவலைகளிலிருந்தும் உங்களுக்கு விடுதலைத்தர வல்லவர்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar