கர்த்தரை நம்புங்கள் (Trust in the Lord).

கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து,     கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான் (எரேமியா 17:7). 

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/DJSgOlEPvBg

தேசங்கள் கடினமான சூழ்நிலைகளுக்கு நேராகக் கடந்து செல்லுகிறது. எங்கும் யுத்த சத்தங்கள் தொனித்துக் கொண்டிருக்கிறது. மூன்றாம் உலக மகா யுத்தம் வந்துவிடுமா என்ற நிலையும் காணப்படுகிறது. கொரோனோ கொள்ளை நோயினால்,     உலக சுகாதார அமைப்பின் படி சுமார் எழுபது லட்சம் ஜனங்கள் மரித்தும்,     ஜனங்களின் சுபாவங்களில் எந்த மாற்றத்தையும் அது கொண்டு வரவில்லை. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,     அதை அறியத்தக்கவன் யார்? என்றும்,     மனுஷர்களுடைய இருதயத்தில் பைத்தியம் குடிகொண்டிருக்கிறது என்றும்,     அவன் இருதயத்தின் நினைவுகள் பொல்லாதது என்றும் வேதம் கூறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் நம்முடைய நம்பிக்கை யார் மேல் காணப்படுகிறது? நம்முடைய தேசங்களின் தலைவர்கள் மீதிலா? ஆயுத சக்திகள் மீதிலா? மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து,     மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு,     கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மனுஷன் மேலும்,     புயபலத்தின் மீதும் நம்பிக்கை வைத்தால் நாம் சபிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் வறட்சியான பாலைவனத்தில் வளரமுடியாமல் கறளையாய்ப் போய்,     கடைசியில் வாடி வதங்கிப் பட்டுப் போகும் ஒரு செடிக்கு ஒப்பாயிருப்பார்கள். ரப்சாக்கேயும்,     சனகெரிப்பும்  மாமிச  பெலத்தை  நம்பினார்கள். எசேக்கியா ராஜாவுக்கு விரோதமாக அனேக மேட்டிமையான வார்த்தைகளைப் பேசினார்கள். உங்கள் நம்பிக்கை என்ன? யார் மேல் உங்கள் நம்பிக்கையை வைத்திருக்கிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள். எசேக்கியா எல்லாவற்றையும் கர்த்தருடைய சமூகத்தில் வைத்தான். ஆகையால் கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார். அவன் ஒரு லட்சத்து என்பதினாயிரம் பேரை வெட்டிப் போட்டான்,     சனகரிப் செத்த முகத்தோடு அசீரியாவிற்கு திரும்பிப் போனான். அவன் குமாரர்கள் அவனை வெடிப் போட்டார்கள்,     ஒரு சபிக்கப்பட்ட பாத்திரமாய் அவன் காணப்பட்டான்.

கர்த்தருடைய பிள்ளைகளே,     நீங்கள் கர்த்தரை நம்புங்கள்.  இஸ்ரவேலே கர்த்தரை நம்பு என்று வேதம் கூறுகிறது. நம்முடைய எல்லா சூழ்நிலைகளிலும் நம்பத்தக்கவர் அவரே. ஆகையால் தான் வேதத்தின் மையவசனமும்,     மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும்,     கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்,     பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும்,     கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று கூறுகிறது (சங். 118:8,    9). நீங்கள் அவர்மேல் வைக்கிற நம்பிக்கை மாத்திரம் உங்களை ஒரு நாளும் வெட்கப் படுத்தாது. மனுஷர்கள் மேல் நம்பிக்கை வைத்தால் ஒரு நாளில் வெட்கப் படுவீர்கள். எங்கள் நாடு வல்லரசு,     எங்கள் ராணுவம் எங்களைப்  பாதுகாக்கும் என்று நினைத்தால் வெட்கப் படுவீர்கள்,     ஆஸ்தி ஐசுவரியங்களை நம்பினால் வெட்கப்படுவீர்கள். ஆனால் கர்த்தரை நம்பினால் ஒருநாளும் அவர் உங்களைக் கைவிட மாட்டார். எசேக்கியா கடினமான சூழ்நிலையில் கர்த்தரை நம்பினதால்,     அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே,     அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை என்று வேதம் அவனை மெச்சுகிறது. ஆகையால் முழு மனதோடு கர்த்தரை நம்புங்கள். அப்போது நீங்கள்   தண்ணீரண்டையிலே  நாட்டப்பட்டதும்,      கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும்,     உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும்,     மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பீர்கள். நீங்கள் பாக்கியவான்களாய்,     ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் என்றும் பாதுகாப்போடு காணப்படுவீர்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar