மத்தேயு 5 : 3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/cUm6i4y4Wgs
இயேசு தன்னுடைய மலை பிரசங்கத்தில் (மத்தேயு 5 ,6 ,7ம் அதிகாரங்கள்) முதன் முதலாக சொன்ன வார்த்தை தான் இந்த வசனம். பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வதற்கு ஒரு திறவுகோலை கர்த்தர் கொடுக்கிறார். அந்த திறவுகோல் ஆவியில் எளிமையாய் இருப்பது. ஆவியில் எளிமையாய் இருப்பதென்றால் என்ன?
உதாரணத்திற்கு ஒருவன் பொருளாதாரத்தில் ஏழ்மையாய் இருக்கிறானென்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு இந்த உலகத்தில் தேவையான உணவு, வீடு, வாகனம் என்று எதுவும் இல்லாத ஒரு பிச்சைக்காரன் போல அன்றாட உணவிற்கு பிச்சைகேட்டு புசித்து காலியானவுடன், மீண்டும் அடுத்த நாளுக்கு தேவையான உணவை தேடுகிறான். அதே போல தான் ஆவியில் எளிமை என்றால் அனுதினமும் இயேசுவை சார்ந்திருப்பது; சுய திருப்தி மற்றும் சுய நம்பிக்கை இல்லாமல் வாழ்வது; நம்முடைய மாம்சத்தின் படி வாழாமல் இருப்பது. யோவான் 5 : 9ல் அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார் என்று வாசிக்கிறோம். ஒவ்வொரு நாளும் இயேசு சொல்லுகிறபடி வாழ்வது.
ஆவியில் எளிமையுள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்? முதலாவது அவர்கள் இவ்வுலகத்துக்குரிய காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் தேவனுக்கேற்கும் காரியங்களில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தான் ஒரு பாவி என்று அறிக்கையிட்டு ஒவ்வொரு நாளும் தங்களை தேவ சமூகத்தில் தாழ்த்தி, தேவனுடைய இரக்கத்திற்காகவும், கிருபைக்காகவும், பாவ மன்னிப்பிற்காகவும் காத்திருப்பார்கள்.
இரண்டாவது, தங்களுடைய பாவ மன்னிப்பிற்காக கிறிஸ்துவின் மரணத்தையும் அவருடைய உயிர்தெழுதலையும் விசுவாசித்து, விசுவாசத்தினால் கிறிஸ்துவிடம் திரும்புவார்கள்.
மூன்றாவதாக, முழுவதுமாக இயேசுவை சார்ந்திருப்பவர்கள். இரண்டு மாத மூன்று மாத குழந்தை தானாக எதையும் செய்ய முடியாது. அது முழுவதுமாக தன்னுடைய பெற்றோரையே சார்ந்திருக்கும். அதுபோல முழுவதுமாக இயேசுவை சார்ந்திருப்பது. தேவ வெளிப்பாட்டை குறித்து இயேசு குறிப்பிடும்போது மத்தேயு 18 : 2ல் இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றும் சிறு பிள்ளையை போலவும் இருக்க வேண்டுமென்று சொல்லுவதை பார்க்கலாம். அதுபோல வாழ்பவர்கள்.
நான்காவது, தேவனுடைய ஊழியத்தை செய்ய ஒப்புக்கொடுத்தவர்கள். இயேசு சொன்னார் அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன் என்பதாக. தங்களை வெறுத்து சிலுவையை எடுத்து செல்பவர்கள்.
இவ்வாறு ஆவியில் எளிமையுள்ளவர்களாக இருக்க ஒப்புக்கொடுத்து கீழ்ப்படிந்து நடங்கள்; அப்பொழுது பரலகராஜ்யம் உங்களுடையதாயிருக்கும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org