ஓசி 14:5. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4KMWpC9Ietk
ஓசியா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்களின் அருவருப்பான காரியங்களை, வேசித்தனங்களை சுட்டிக்காட்டுகிறவனாக காணப்பட்டான். இறுதியில் இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து சொல்லுகிறான் இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய் என்பதாக. இன்றும் இஸ்ரவேல் ஜனங்களாக இருந்தாலும், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நாமாக இருந்தாலும், நம்முடைய பாவ பழக்கங்களை விட்டு கர்த்தரிடத்தில் திரும்ப வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். மாத்திரமல்ல, வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம் என்று வார்த்தையினால் கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதோடு கூட அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் வரவேண்டும். என்னுடைய படை பலம், என்னுடைய பண பலம், என்னுடைய ஆள் பலம், என்னுடைய இராணுவ பலம், என்னுடைய கல்வி பலம், என்று நம்பிக்கொண்டிருக்காமல், கர்த்தரையே சார்ந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மனம் திரும்பிய பிறகு, இஸ்ரவேலர்களை பார்த்து கர்த்தர் சொல்லுகிறார் நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று என்பதாக. ஆண்டவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு. எவ்வளவோ பாவங்களை செய்து வந்தாலும், மனம் திரும்பும் போது, மனப்பூர்வமாய் சிநேகிக்கிற நல்ல தகப்பன் நம்முடைய ஆண்டவர். இப்படியாக கர்த்தர் கோபத்திலிருந்து மனஸ்தாபப்பட்டு அவர்கள் பாவங்களை மன்னித்தாலும், அடுத்து ஒரு நல்ல ஆசிர்வாதத்தை கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை பார்த்து சொல்லுகிறார். அது என்னவென்றால் நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன் என்பதாக கர்த்தர் சொல்லுகிறார்.
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன் என்பது பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகமாய் (Outpouring of Holyspirit) காணப்படுகிறது. கடைசி நாட்களில் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னவர், நிச்சயமாக கண்கள் அடைக்கப்பட்ட நம்முடைய மூத்த சகோதரர்களாகிய இஸ்ரவேல் ஜனங்கள் மேலும், ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நம் மேலும் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவார். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவதே உன்னதமான ஆசீர்வாதமாக காணப்படுகிறது. இயேசு கடைசியில் மிகவும் வலியுறுத்தி பிரசங்கித்த காரியம் பரிசுத்த ஆவியானவரை பற்றியது தான். பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படும்போது தான் தேசத்தில் எழுப்புதல் உண்டாகும். பரிசுத்த ஆவியானவர் ஊற்றபடும்போது தான் சபைகள் வளரும். பரிசுத்த ஆவியானவர் ஊற்றபடும்போது சந்துருவின் சாதி திட்டங்கள் எல்லாம் முற்றிலும் அழியும். ஆகையால் கர்த்தர் கொடுத்த வாக்கின்படியே இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியிலும் எழுப்புதல் உண்டாக நாமெல்லாரும் இணைந்து ஜெபிப்போம். இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும் (ஆதி 33:28).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org