பக்தியுள்ளவன் (The godly man).

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார் (சங். 4:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9py2NZRCyko

தாவீது தன்னை பக்தியுள்ளவனென்றும்,     கர்த்தர் அவருக்காகத் தன்னை தெரிந்து கொண்டார் என்றும் கூறுகிறார். ஆகையால் அவன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது,     அவர்   கேட்பார் என்றும் விசுவாச அறிக்கையிட்டான். ஆனால் அவனுடைய நாட்களில் காணப்பட்ட மற்ற சிலரை அவன் பார்க்கும் போது,     இரட்சியும் கர்த்தாவே,     பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான், உண்மையுள்ளவர்கள்  மனுப்புத்திரரில்  குறைந்திருக்கிறார்கள் (சங். 12:1) என்று வேதனைப்பட்டான். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பக்தியுள்ள ஜீவியம் செய்கிறவர்களாய் காணப்படுகிறோமா? பக்தியற்றவர்களாய் காணப்படுகிறோமா?. பக்தியுள்ள ஜீவியம் செய்கிறவர்களுடைய ஒரு அடையாளம் அவர்கள் ஜெபிக்கிறவர்களாய் காணப்படுவார்கள். கர்த்தருடைய கண்கள் பக்தியுள்ள ஆண்களையும்,     பெண்களையும் இன்று தேடுகிறது. அப்படிப்பட்டவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அவர்களுக்குப் பதிலளிக்கக் கர்த்தர் காத்திருக்கிறார். 

பிறவிக் குருடன் தான் இயேசுவால் சொஸ்தமாக்கப்பட்டதை நம்பாத பரிசேயர்களைப் பார்த்து,     பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்,     ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார் (யோவான் 9:31) என்றான்.   கர்த்தர் தேவபக்தி உள்ளவர்களுக்குச் செவிகொடுக்கிறவர். அதுபோல முதல் புறஜாதி கிறிஸ்தவனாய் மாறின கொர்நேலியும் கூட   தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து,     ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து,     எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தான் என்று அவனைக் குறித்து வேதம் கூறுகிறது. அவன் ஜெபங்களும்   தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சன்னிதியில் எட்டினது. ஆகையால் கர்த்தர் பேதுருவை அனுப்பி வசனத்தைக் கற்றுக் கொடுத்து,     அவனையும் அவன் வீட்டார் அனைவரையும் இரட்சித்தார். கடைசி நாட்களில் பக்தியுள்ளவர்கள் அற்றுப் போகிற காலமாயிருக்கிறது. எப்பிராயீமே,     உனக்கு என்ன செய்வேன்? யூதாவே,     உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும்,     விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது (ஓசியா6:4) என்று கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். நம்முடைய பக்தியின் வாழ்க்கை கூட,     அனேக நேரங்களில் மேகத்தைப் போலவும்,     பனியைப் போலவும் நிலையற்றதாய்,     மாயையாய் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் செய்ய நினைத்ததைக் கூடச் செய்யாமல் காணப்படுகிறார். ஆகையால் தேவபக்திக்குரிய ஜீவியம் செய்ய நம்மை அர்ப்பணிப்போம்,     அப்போது கர்த்தர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு உங்களுக்குப் பதிலளித்து,     உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar