அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார் (மத். 25:32, 33).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OVcGjkvL5l0
இயேசுவின் ஒலிவ மலை வெளிப்பாடு மத்தேயு 24, 25ம் அதிகாரங்களில் எழுதப்பட்டிருக்கிறது. உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன என்று எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்ட சீஷர்களுக்கு ஆண்டவர் கொடுத்த போதனையை ஒலிவ மலை வெளிப்பாடு என்கிறோம். அதில் பரலோக ராஜ்யத்தைப் பற்றி இயேசு கூறிய மூன்று உவமைகளை எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது ஜனங்களை இரண்டாகப் பிரிப்பார் என்பதாகும். ஒரு மேய்ப்பன் தனது மந்தையில் காணப்படுகிற செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் இரண்டாகப் பிரித்து செம்மறி ஆடுகளை வலதுபக்கத்திலும் வெள்ளாடுகளை இடது பக்கத்திலும் நிறுத்துவதைப் போல, கர்த்தர் ஜனங்களை இரண்டாகப் பிரித்து, நிறுத்துவார்.
ஆண்டவர், தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள், தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள், அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள், வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள, வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள், காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை, தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை, அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை, வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை, வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார். வேதம் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் என்று கூறுகிறது. நம்முடைய கிரியைகளினால் ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாது. அதே வேளையில் கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்றும் வேதம் எச்சரிக்கிறது. ஆகையால் கிரியைகளினால் மாத்திரம் நாம் இரட்சிக்கப்படலாம் என்று கருதி, அதை மாத்திரம் தேவ ஜனங்கள் செய்கிறவர்களாய் காணப்படக்கூடாது. அப்பொழுது நீங்களும் நானும் இரட்சிக்கப்படுவதற்காகக் கல்வாரிச் சிலுவையில் ஆண்டவர் சிந்தின ரத்தத்தைக் காலின் கீழ் போட்டு மிதிக்கிறவர்களுக்கு ஒப்பாகிவிடுவோம். இரட்சிக்கப்பட்ட தேவ ஜனங்கள், அவர்கள் பெற்ற இரட்சிப்பை, கிரியைகளில் வெளிப்படுத்துகிறவர்களாய் காணப்பட வேண்டும். பதில் செய்யமுடியாத ஏழைகளுக்கு, உடன் விசுவாசிகளுக்கு, ஊழியர்களுக்கு நாம் செய்வதெல்லாம் இயேசுவுக்குச் செய்வதற்கு ஒப்பாய் காணப்படுகிறது. அப்படிப்பட்டவர்களை நாம் விசாரிப்பது இயேசுவை விசாரிப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான், நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான், சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். கடைசி நாட்களில் அக்கிரமம் மிகுதியாவதினால் அனேகருடைய அன்பு தணிந்து போகிறது. நான், என்னுடைய குடும்பம் என்று சுய நலமாய் சிந்திப்பதினால் பிறர் நலன்களையும் நோக்குவதில் குறைவு பட்டுப்போகிறோம்;.
நன்மைசெய்கிறதில் கர்த்தருடைய ஜனங்கள் சோர்ந்துபோகாமல் இருக்க வேண்டும், நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம் என்று வேதம் கூறுகிறது. இந்தப் பூமிக்குரிய வாழ்க்கையில் மாத்திரமல்ல, நித்தியத்திலும் அதற்குரிய பலன்களை அறுவடை செய்வோம் என்பதை அறிந்து வாழுங்கள். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக என்பது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. ஆகையால் பிறர் நலன்களையும் நோக்கி ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள், அப்போது கர்த்தருடைய நாமம் மகிமைப் படும், அவருடைய வருகையில் அதற்குரிய பலன்களைப் பெறுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar