மறைவானவைகள் கர்த்தருக்கே உரியவைகள்(Secret things belong to the Lord):-

உபா 29:29. மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wA61f8GR1Bo

அறியாமையின் காரணமாக நாம் தேவனை கேள்வி கேட்பதுண்டு. கர்த்தாவே ஏன் என் பிள்ளையை எடுத்துக்கொண்டீர்? நான் ஒருவன் மாத்திரம் ஏன் இவ்வளவு கடினமான பாதையில் கடந்து செல்ல வேண்டும்? என் மண வாழ்வில் ஏன் இது நடக்கிறது? ஏன் இந்த வியாதி என் குடும்பத்தினருக்கு வந்தது ? ஏன் நான் எப்போதும் இந்த பண பிரச்சனையில் இருக்க வேண்டும் ? இவ்வாறு அனுதின வாழ்க்கையில் நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத காரியங்கள் நடைபெறலாம். இவ்விதம் நாம் கர்த்தரை கேள்வி கேட்கிறவர்களாக அநேக நேரங்களில் மாறிவிடுகிறோம். ஆனால் சூழ்நிலைகள் எப்படியாக இருந்தாலும் ஒன்றை தேவ பிள்ளைகள் விளங்கிக்கொள்ளவேண்டும். கர்த்தர் மாறாதவர்; இயேசு நல்லவர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை; அவர் துவக்கத்தை முடிவிலிருந்தும், முடிவை துவக்கத்திலிருந்தும் அறிகிறவர்; எல்லாவற்றையும் நன்மைக்கு ஏதுவாகவே செய்கிறவர் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

ஒரு வாலிபன் இரவில் ஒரு சொப்பனம் கண்டான். அதில் தேவ தூதன் ஒருவன் காரிருளில், கொட்டும் மலையில் தனக்கு உதவி செய்யும்படியாக ஒரு வீட்டின் கதவை தட்டினான். கதவை திறந்த வயது முதிர்ந்த தம்பதியினர், அவனுக்கு இடம் கொடுத்து, தங்கி இளைப்பாறும்படியாக பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த முதியவர்கள் ஒரு வெள்ளி தட்டை தேவ தூதனுக்கு காண்பித்து, தங்களுக்கு 50 வது திருமண நாளில், தன்னுடைய உறவினர் பரிசளித்த இந்த வெள்ளி தட்டில் சாப்பிட வேண்டும் என்று தீர்மானித்திருப்பதாக சொல்லி படுக்கைக்கு சென்றார்கள். இரவில் அந்த தேவ தூதன் அந்த வெள்ளி தட்டை எடுத்துவிட்டு சென்றான். கனவில் அந்த வாலிபன் ஏன் இதை செய்தீர், உம் மீது இறக்கப்பட்ட அந்த முதியவர்களுக்கு ஏன் இந்த காரியத்தை செய்தீர் என்று கேட்டான். அதற்கு தேவ தூதன், இந்த வெள்ளி தட்டின் மேற்புறத்தில் விஷம் பூசப்பட்டிருக்கிறது. இதில் சாப்பிட்டு அந்த முதியவர்கள் மரித்துப்போனால், அந்த உறவினர்கள் சொத்தை அபகரித்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டியிருந்தார்கள். ஆகையால் நான் எடுத்துக்கொண்டு வந்தேன் என்பதாக.

தேவ பிள்ளைகளேஉங்கள் உள்ளத்திலும் தேவன் ஏன் இதை அனுமதித்தார் ? ஏன் இப்படி சம்பவிக்கிறது ? போன்ற பல கேள்விகள் இருக்க கூடும். அவர் தேவன்! தேவன் தேவனாகவே இருக்கட்டும்!. நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் (சங் 46:10) என்று அவர் கூறுகிறார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோம 8:28) என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆகையால் கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் செய்கிற எந்த காரியமும் நன்மையாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh.R
Word of God church
Doha – Qatar
www.wogim.org