உங்கள் சுமை என்ன? (What is your burden?):-

மத் 11:29,30. நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hEtn_ukQ_04

ஒரு ஊழியக்காரர் இப்படியாக ஜெபித்தார். கர்த்தாவே மற்றவர்கள் கொடுக்கிற பாரங்களை சுமக்க எனக்கு விருப்பமில்லை. என்னால் எனக்கு உண்டாகிற பாரங்களை சுமக்க எனக்கு விருப்பமில்லை. பிசாசு கொடுக்கிற பாரங்களை சுமக்க எனக்கு விருப்பமில்லை. வேலையில் உயர் அதிகாரிகள் கொடுக்கிற பாரங்களை சுமக்க எனக்கு விருப்பமில்லை. பிள்ளைகள் மூலமாக வருகிற பாரங்களை சுமக்க விருப்பமில்லை. உலக தருகிற ஆசை பாசங்கள் என்னும் பாரங்களை சுமக்க விருப்பமில்லை. ஆனால் நீர் எனக்கு கொடுக்கிற பாரங்களை மட்டுமே சுமக்க விரும்புகிறேன். என்ன ஒரு அருமையான ஜெபம் என்று பாருங்கள். இப்படி நீங்கள் ஜெபித்ததுண்டா? இயேசு தரும் பாரங்களை மாத்திரம் சுமக்க ஒப்புக்கொடுத்துள்ளீர்களா? பரிதாபம் சிலருக்கோ இயேசுவை மறந்து எப்பொழுது பார்த்தாலும் வேலை, தொழில், விளையாட்டு என்று சொல்லி அதையே தங்களுடைய நுகமாக எண்ணி ஓடிக்கொண்டே இருப்பதுண்டு.

இன்னொரு ஊழியக்காரர் இப்படியாக சொன்னார். ஆண்டவரே எனக்கு ஆத்தும பாரத்தையும், ஜெப பாரத்தையும் தாரும். அன்றிலிருந்து கர்த்தர் அவர் ஜெபித்தபடியே அப்படிப்பட்ட பாரத்தை கொடுத்து அழிந்துபோகும் ஆத்துமாக்களை குறித்து தாகம் கொண்டவராக இருந்தார்.

அநேகர் நினைப்பதுண்டு ஆண்டவர் ஒரு சுமையை கொடுத்தால் நான் எப்படி தாங்கிக்கொள்ளுவேன் என்பதாகவும் அது மிகவும் கடினமாக இருக்கும் என்பதாகவும். வசனம் சொல்லுகிறது என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது. மோசே நினைத்தான் நான் எப்படி இவ்வளவு பெரிய இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனிடமிருந்து விடுவித்து பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் அழைத்துகொண்டுவருவேன் என்று. ஆனால் கர்த்தர் அவனோடிருந்து தகப்பனை போல நடத்திகொண்டுவந்தார். அவன் சுமந்த சுமைகளையெல்லாம் கர்த்தர் இலகுவாக மாற்றிவிட்டார்.

இயேசு உங்களுக்கு கொடுக்கிற நுகத்தை சுமக்க உங்களை அற்பணியுங்கள். சிலருக்கு கர்த்தர் ஜெப பாரம், சிலருக்கு ஆத்தும பாரம், சிலருக்கு ஊழிய பாரம் என்று கர்த்தர் கொடுக்கக்கூடும். அவற்றை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு உங்களுக்காக சந்தாஷத்தோடே சிலுவையை சகித்தாரே. நீங்கள் அவர் கொடுக்கிற நுகத்தை சந்தோசத்தோடு கூட சகிக்க ஆயத்தமாகுங்கள். கர்த்தருக்காக படுகிற உபத்திரவங்களையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் பொறுமையோடும் சந்தோசத்தோடும் சகித்துக்கொள்ளுங்கள். பவுலுக்கு ஒரு முள் எப்பொழுதும் நுகமாக இருந்தது. இயேசு சொன்னார் பவுலே என் கிருபை உனக்கு போதும் என்பதாக. ஆகையால் தான் பவுல் கடைசிமட்டும் கர்த்தருக்காக வைராக்கியமாக இருந்தான். அழிவுகள், வேதனைகள், துன்புறுத்துதல் வந்தபோதெல்லாம் எல்லாவற்றையும் சந்தோசத்தோடு ஏற்றுக்கொண்டு ஊழியத்தை செம்மையாக செய்துமுடித்தான்.

கர்த்தருடைய நுகத்தை சுமருங்கள். அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org