உங்கள் நாமங்கள் எங்கே இருக்கிறது? (Where are your names?)

சங் 49:11 தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/NlnsFiJS5OQ

ஒரு தகப்பனார் தன்னுடைய மகள் பன்னிரெண்டாவது தேர்வில் பள்ளிக்கூடத்தில் நான்காவது இடத்தில் வந்துவிட்டாள் என்று மிகவும் சோர்வுடன் இருந்தார். ஏன் சோர்வுடன் உள்ளீர்கள், உங்கள் மகள் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்து விட்டாளே என்று மற்றவர்கள் வினவியபோது, அந்த தகப்பன் சொன்னார், என் மகள் மூன்றாவது இடத்தில் வந்திருந்தால், அவளுடைய பெயர் பள்ளிக்கூட அறிவிப்பு பலகையில் வந்திருக்கும் என்ற கவலையில் இருந்தார். இப்படி தங்களுடைய பெயர்கள் பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் பொறிக்கப்பட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் ஒரு செயல்திட்டங்களை நிறைவேற்றினால் அவர்களுடைய பெயர்கள் கற்களில் பொறிக்கப்பட வேண்டும் என்று வாஞ்சை கொள்ளுகிறார்கள். விமான நிலையம், இரயில் சேவை, பேருந்து நிலையம், தொழிற்கூடங்கள் தொடங்கி, சிறிய சாலை வசதிகள் செய்து கொடுத்தாலும், சிறிய கிராமங்களில் நிறுவப்படும் பேருந்து நிறுத்தும் நிழல் கூடத்திற்கும் கூட தங்கள் பெயர்களை போட வேண்டும் என்று துடிக்கிற தலைவர்கள் ஏராளம் உண்டு என்பதை நாம் பார்க்கிறோம்.

ஒரு நபர் தன்னுடைய பட்டணத்தில் பெரிய நிலம் வாங்க வேண்டும் என்று ஒரு தரகரை அணுகினார். அந்த தரகரிடம் சொன்னார், நான் தான் அங்கே பெரிய அளவில் நிலம் வாங்கப்போகிறேன், ஆகையால், அந்த இடத்திற்கு என்னுடைய பெயர் தான் சூட்டப்பட வேண்டும் சொன்னார்.இப்படி தங்கள் பெயர்கள், வாங்கும் நிலத்திலும், கட்டும் வீடுகளிலும் இருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கிற திரளான ஜனங்கள் இருக்கிறார்கள்.

ஆனால் ஆண்டவர் உங்கள் பெயர்கள் எங்கே இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார்? இயேசு சொன்னார் ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார் (லூக்கா 10:20). உங்கள் ஒவ்வொருவருடைய நாமங்களும், உங்கள் பிள்ளைகளுடைய நாமங்களும், பெற்றோர்களுடைய நாமங்களும், பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். உங்கள் நாமங்கள் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பவுல் பிலிப்பியருக்கு எழுதும்போது சொல்லுவான், அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்கிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது (பிலிப்பியர் 4:3) என்பதாக. பரலோகத்தில் வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன (வெளி 21:13). நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன (வெளி 21:14). இப்படியாக உங்கள் பெயர்கள் பரலோகத்திலும், ஜீவ புஸ்தகத்திலும் எழுதப்பட வேண்டும் என்ற சிந்தையோடு செயல்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org