அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்(நியாயாதிபதிகள் 6: 14).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/TIJUtrJe2qM
இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டபோது, கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்க சித்தம்கொண்டபோது கிதியோனை நோக்கிப் பார்த்தார்.
மனிதர்களுடைய பார்வைக்கும், கர்த்தருடைய பார்வைக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு.
கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்று சொல்லி கர்த்தர் சாமுவேலை ஈசாயின் வீட்டிற்கு அனுப்புகிறார். சாமுவேலோ தோற்றத்தின்படி முடிவெடுக்க முயற்சிக்கிறான். அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: … மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். இதை I சாமுவேல் 16ன் முதல் 7 வசனங்களில் வாசிக்கிறோம்
ஆம் கர்த்தருடைய ஜனங்களே! இதை தாவீதின் தெரிந்துகொள்ளுதலிலிருந்து மட்டுமல்ல, கிதியோனின் தெரிந்துகொள்ளுதலில் இருந்தும் நன்கு புரிந்துக் கொள்ளமுடியும். முதலாவது கிதியோன் என்றால் வெட்டுபவர் அல்லது தறித்து போடுபவர் என்று பொருள். அவருடைய பெயரின் அர்த்தத்தின்படியே தகப்பனுக்கு இருந்த பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டார்.
அடுத்ததாக, கிதியோன் ஒரு உழைப்பாளி. கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்துக்கொண்டிருந்தான். இது அவனுடைய உழைப்பையும், எதிரிகளிடமிருந்து விளைச்சலை காப்பாற்றவேண்டும் என்கிற நல் எண்ணத்தையும் பிரதிபலிக்கிறது.
அதுமட்டுமல்ல, கிதியோன் தன்னைக் குறித்து சிந்தித்ததை விட அதிகமாக மக்களின் அவல நிலையை எண்ணி வருந்துவதையும், கர்த்தருடைய அற்புதங்களையும், வல்லமையையும் குறித்து அறிந்து அதை நம்புவதையும் 13ம் வசனத்தில் வாசிக்கிறோம். (அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.)
அடுத்தபடியாக தன் பிதாக்கள் எமோரியருடைய தேவர்களுக்குப் பயந்து கர்த்தரைவிட்டு பாகாலுக்கு பலிபீடத்தையும் தோப்பு விக்கிரகத்தையும் உருவாக்கி திசை மாறியபோதும், கிதியோன் இஸ்ரவேலின் தேவனின் அற்புதங்களை நம்புகிறவனாகவும், வல்லமையை எதிர்நோக்கினவனாகவும் காணப்பட்டான். இப்படிப்பட்ட கிதியோனையே கர்த்தர் நோக்கிப் பார்த்தார்
ஆம் தேவனுடைய ஜனங்களே, கர்த்தர் உங்களை நோக்கிப் பார்க்க வேண்டுமா? நீங்களும் கர்த்தருக்குப் பிரியமில்லாததை வெட்டிப்போட, தரித்துப்போடவேண்டும்.
அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கும் விளைச்சலை கொள்ளையடித்துக் கொண்டுபோகும் சத்ருவுக்கு எதிராக போராடி அவனுடைய கையினிற்று சில ஆத்துமாக்களையாவது விடுவிக்கவேண்டுமென்கிற துடிப்பு உங்களுக்குள் இருக்கவேண்டும்.
சத்ருவுக்கு பயந்து திசைமாறி மலைகளிலும், குகைகளிலும், கெபிகளிலும், ஒளித்துக்கொண்டிருக்கிறவர்களை கொண்டுவந்து கர்த்தருடைய சமூகத்தில் அவர்களுடைய சுதந்திரத்தில் நிறுத்தவேண்டும் என்கிற எண்ணம் உங்களிடத்தில் இருக்கவேண்டும்.
கர்த்தருடைய அற்புதங்களையும், வல்லமையையும் விசுவாசிக்கிறவர்களாக இருக்கவேண்டும். அப்படியென்றால் கர்த்தர் உங்களையும் நோக்கிப் பார்ப்பார்.
அவருடைய பார்வை உங்கள்மீது படும்போது நீங்கள் பராக்கிரமசாலியாக மாறுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் வாஞ்சையும் வைராக்கியமும் தேவ பெலனாக மாறும். கர்த்தர் உங்களோடிருப்பதால் ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீங்கள் சத்ருவை முறியடிப்பீர்கள்.
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் என்றும் பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார் என்று வசனம் கூறுகிறது..
இப்போதும் கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்ற ஆசீர்வாதம் உங்கள் சிரசில் தங்குவதாக. ஆமென்.
John Finny
Word of God church
Doha – Qatar
www.wogim.org