அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன், அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள், பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள் (சகரியா 12:3).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ezbNq3u7xhk
கடைசி நாட்களில் எருசலேம், அதைச் சுற்றிக் காணப்படுகிறவர்களுக்கும், மற்ற எல்லா ஜனங்களுக்கும், ஒரு தத்தளிப்பின் பாத்திரமாகவும், பாரமான கல்லாகவும் காணப்படும். ஒரு பாறை என்றால் யாரும் அதைக் கிளப்புவதற்கு முயற்சிக்கமாட்டார்கள். ஆனால் பாரமான கல்லாய் காணப்படுவதினால் அதைக் கிளப்பும்படிக்கு அனேகர் முயற்ச்சிப்பார்கள், அப்படிச் செய்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள். சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு என்று எழுதப்பட்ட இடத்தில் தான் முதல்முதலாய், சாலேம் என்ற எருசலேம் என்னும் வார்த்தை வருகிறது (ஆதி. 14:18). யூதாவில் தேவன் அறியப்பட்டவர், இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. மெல்கிசேதேக்கு தகப்பனும் தாயும் வம்ச வரலாறும் இல்லாதவன், இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். ஆகையால் மெல்கிசேதேக்கு இயேசுவுக்கு ஒப்பாய் காணப்படுகிறான். ஆக எருசலேமின் ராஜா இயேசுவாய் காணப்படுகிறார். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக அவர் இந்த பூமியில் மனுஷகுமாரனாய் பிறந்த போது எருசலேமின் அருகில் உள்ள பெத்லகேமில் பிறந்தார். மூன்றரை வருடங்கள் அவர் ஊழியம் செய்த போதும் எருசலேம் ஆலயத்தில் அனேக முறை காணப்பட்டார். அவர் எருசலேம் பட்டணத்தின் அருகில் உள்ள கொல்கொதாவில், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக் குட்டியாய், சிலுவையில் அடிக்கப்பட்டு ஜீவனைக் கொடுத்தார். அவர் உயிர்த்தெழுந்த பின் பரமேறினதும் எருசலேமின் அருகிலுள்ள ஒலிவமலையிருந்து எடுத்துக் கொள்ளப் பட்டார். அவருடைய பகிரங்க இரண்டாம் வருகையில் அவருடைய பாதங்கள் ஒலிவ மலையின்மேல் நிற்கும் என்று வேதம் கூறுகிறது.
இந்நாட்களில் எருசலேம் என்பது சபைக்கு ஒப்பாகக் காணப்படுகிறது. மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள் என்று வேதம் கூறுகிறது. இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்றவர், இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான், இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றும் கூறினார். சபை தேவனுடைய கல் ராஜ்யம், அது ஒருநாளும் அசைக்கப் படுவதில்லை. சபையை அசைத்துப் பார்க்கவும், அழிக்கவும் முற்பட்டவர்கள் அழிந்து போனார்களே ஒழியச் சபை வளர்ந்து பெருகிக் கொண்டு காணப்படுகிறது. சபை என்பது வெறும் கட்டிடமல்ல, கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்களும் நானும் தான் சபை. ஆகையால் உங்களை அசைத்துப் பார்க்கவும், கிளப்பவும் முயல்கிற அத்தனைப்பேரும் சிதைக்கப்படுவார்கள். நீங்கள் அசையாமல் நிலைத்திருக்கிற சீயோன் பர்வதம் போலக் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar