சங்கீதம் 137:5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/1UCG7MEbav0
இஸ்ரவேல் மக்கள் தேவனைவிட்டு வழிவிலகிப் போனதினிமித்தம் பாபிலோனில் சிறைப்பட்டுப்போனார்கள் இதை 2 நாளா.36:16 முதல் 20 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனில் இருந்தபோது தங்களுடைய அனுபவத்தை சங் 137ல் கூறுகிறார்கள். சீயோனை நினைத்து அழுதோமென்றும், எருசலேமை எப்படி மறக்கமுடியுமென்று தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்துவதை இந்த சங்கீதத்தில் வாசிக்க முடியும்.
இதில் எருசலேமே என்று சொல்லுவது, கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயத்தை குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு விசுவாசியும், கிறிஸ்தவனும் கர்த்தருடைய சபைமீது பற்றுதலாயும், அவருடைய வார்த்தையின் மீது எப்போதும் வாஞ்சையுமாய் இருக்கவேண்டும். ஒருவேளை தேவனுக்கும் அவருடைய இராஜ்ஜியத்தின் மேன்மைக்கும் முதலிடம் கொடாமல், ஆலயத்துக்குப் போகாமல், வேதத்தை வாசியாமலும் கர்த்தரை மறந்தால் சொல்லொண்ணா துயரத்தை அடையநேரிடும்.
வேதத்திலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம். கர்த்தரை மறந்தபோது அந்நிய ராஜாக்களின் கையில் விற்றுப்போடப்பட்டார்கள். “அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்… 1சாமு.12:9 – பாருங்கள் ஒரு முறையல்ல பல முறை அந்நிய ராஜாவின் கையில் விற்றுப்போடப்பட்டார்கள். அதன் விளைவு, பல இன்னல்களை அனுபவிக்க நேரிட்டது. அவர்கள் கையின் பிரயாசத்தையெல்லாம் அந்நியர் சாப்பிட நேர்ந்தது. தேவனை மறக்கிறவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். “துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்” சங்.9:17 – சபைகூடிவருதலை விட்டுவிடுவது, ஆலயத்தை மறப்பது தேவனை மறப்பதற்கு இணையாகும். ஒருவேளை நாம் இதில் குறையுள்ளவர்களாய் காணப்பட்டால் நித்தியத்தையே இழந்துவிடுகிறோம். “ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்” (எரே.2:32) என்று கர்த்தர் அங்கலாய்க்கிறார். நம் நிலைமையை சற்று ஆராய்ந்துப் பாப்போம்.
விசுவாசி என்று சொல்லப்படுகிற நாம், கர்த்தாரையும் அவருடைய வேதத்தையும் மறந்துவிட்டோம். ஆதியில்கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் நமது தேவனோ, அவருடைய வாக்குத்தத்தில் மாறாதவராயும், வாக்குத்தத்தைக்குறித்து மறவாதவராயும் இருக்கிறார். ஏசாயா 44:21ஐ பாருங்கள்; கர்த்தர் சொல்லுகிறார் “யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை” என்று. ஏசா. 49:15,16ஐ பாருங்கள்; “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக் கிறேன்; …” என்று.
தேவஜனமே, தேவனைவிட்டு தூரப்போகும்போது, அது துக்கத்தையும் துன்பத்தையும் நஷ்டத்தையும் கொண்டுவரும். ஒருவேளை இதை வாசிக்கும்போது இதயத்தில் ஒரு துக்கம் உண்டாகிறதா? அந்த துக்கம் மனந்திரும்புதலுக்கு ஏற்றதாக இருந்தால் நலமாக இருக்கும்.
கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
John Finny
Word of God church
Doha – Qatar
www.wogim.org