தபீத்தாளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது (Lesson from Tabitha):-

அப் 9 : 36. யோப்பா பட்டணத்தில் கிரேக்குப் பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/zL3A0RiDubI

தபீத்தாள் புதிய ஏற்பாட்டில் சீஷி என்று சொல்லத்தக்கதான ஒரு வாழ்க்கைமுறையை வாழ்ந்துகாட்டினாள். அநேக சீஷர்களை குறித்து நாம் வாசித்திருந்தாலும், ஒரு பெண்மணி கர்த்தருடைய சிலுவையை அனுதினமும் சுமந்து செல்பவளாக, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, இயேசுவை போல வாழ தன்னை அர்ப்பணித்து வாழ்ந்ததால் தான் அவளை சீஷி என்று வேதாகமத்தில் எழுதியிருப்பதை வாசிக்கமுடியும். ஆண்கள் மாத்திரம் அல்ல பெண்களும் சீஷிகளாக இருக்க முடியும். கிறிஸ்துவள் என்ற நிலைமையை விட்டு சீஷி என்ற நிலைமைக்குள்ளாக இருந்து வாழ்ந்து காட்டியவள். நாம் யாவரும் சீஷிகளாக, சீஷர்களாக வாழ வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராக காணப்படுகிறார்.

இரண்டாவதாக அவள் நற்கிரியைகளை செய்துகொண்டு வருபவளாக காணப்பட்டாள். யாரும் கெட்டுப்போக கூடாது என்று நினைப்பவள். தனக்கு யாரும் துரோகம் இழைத்தாலும் அவர்கள் நன்றாக வாழவேண்டுமென்று நினைப்பவளாக மாத்திரமல்ல நற்கிரியைகளை செய்பவளாக காணப்பட்டாள். நாமும் தபீத்தாளை போல நற்கிரியைகளை செய்பவர்களாக காணப்பட வேண்டும். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் (ரோமர் 2:7 ).

மூன்றாவதாக அவள் தருமங்களை செய்பவளாக காணப்பட்டாள். பசியாக இருப்பவர்களுக்கு உணவையும், ஆடையில்லாதவர்களுக்கு ஆடையையும், இருக்க இடம் இல்லாதவர்களுக்கு இடமும் கொடுத்து எளியவர்களுக்கு தருமங்களை செய்பவளாக காணப்பட்டாள். நீங்களும் செய்ய தக்கவர்களுக்கு தான தருமங்களை செய்யுங்கள். ஒருவேளை சாப்பாட்டிற்காக வழியில்லாமல் இருப்பவர்களை பார்த்த பின்பும் உங்கள் கரத்தை மூடிவிடாதிருங்கள்.

இப்படிப்பட்ட தபீத்தாள் திடீரென்று நோயினால் வாதிக்கப்பட்டு மரணமடைந்தாள். ஆண்டவர் அவளை அப்படியே விட்டுவிடவில்லை. அவர் பேதுருவை அனுப்பி அவன் தபீத்தாளே, எழுந்திரு என்றான்; அந்தபொழுதிலே மரித்த தபீத்தாள் உயிரோடு எழுந்தாள். இந்த கடினமான காலகட்டத்தில் தபீத்தாளை போல நல்ல சீஷிகளாக, சீஷர்களாக, நற்கிரியைகளை செய்பர்களாக, தான தருமங்களை செய்பவர்களாக நாம் இருப்போமென்றால், கர்த்தர் எல்லா தீங்கிற்கும் உங்களை தப்புவித்து விலக்கி காப்பார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org