ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான், இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான் (மத். 5:19).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/tz2YMR91BDU
இயேசு தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் சீஷர்களுக்கு உபதேசிக்கும் போது, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்கிற நீங்கள் முதலாவது அதைக் கைக்கொண்டு பின்பு மற்றவர்களுக்குப் போதிக்கும் படிக்குக் கூறினார். இந்நாட்களில் நாம்தாம் ஆண்டவருடைய சீஷர்கள், கர்த்தருடைய வழிகளை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கிற லேவியர்களும், ஆசாரியர்களுமாய் காணப்படுகிறோம். இயேசுவின் நாட்களில் காணப்பட்ட வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருந்து ஜனங்களுக்குப் போதிக்கிறவர்களாய் காணப்பட்டார்கள், ஆனால் அவர்கள் போதிக்கிற காரியங்கள் ஒன்றையும் அவர்கள் செய்வதில்லை, சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துவார்கள், தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். இந்த கடைசி நாட்களிலும் இவர்களைப் போலக் காணப்படுகிற கர்த்தருடைய ஊழியர்கள் உண்டு. பிரசங்கச் சிங்கங்களாய் காணப்படுவார்கள், ஆழமான இரகசியங்களைப் பேசுகிறோம் என்பார்கள். ஆனால் அவை ஒன்றையும் அவர்கள் கைக்கொள்ளுவதில்லை. விசுவாசிகளும் கர்த்தருடைய வார்த்தையை அதிகமாய் அறிந்திருப்பார்கள், மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பார்கள், ஆனால் அந்த வார்த்தைகளை தங்கள் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்து இல்லை, கனிகொடுக்கிற ஜீவியம் செய்வதுமில்லை.
ஒருமுறை இயேசு பன்னிரு சீஷர்களையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும், பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டு, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து, அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் ப10சிச் சொஸ்தமாக்கினார்கள். அந்த பன்னிருவரில் யூதாசும் ஒருவனாயிருந்தான். அவனும் மனந்திரும்புங்கள் என்று மற்றவர்களுக்குப் பிரசங்கித்து, கர்த்தருடைய பிரமாணங்களை கற்றுக் கொடுத்தான். ஆனால் கர்த்தருடைய வார்த்தை ஒன்றும் அவனுடைய வாழ்க்கையில் கிரியை செய்யவில்லை. பண ஆசையும், பதவி ஆசையும் உடையவனாய் காணப்பட்டான். இயேசு அரசியல் தலைவராய் மாறி தங்களுடைய ராஜாவாய் காணப்படுவார் என்று நினைத்தான். அவருடைய ராஜாங்கத்தில், முக்கியமான பதவியில் காணப்படலாம் என நினைத்து ஏமாந்த வேளையில் முப்பது வெள்ளிக் காசுக்காக இயேசுவை முத்தத்தினால் காட்டிக் கொடுத்தான். ஆகையால் யூதாஸ் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி ஊழியத்தையும், அப்போஸ்தலப்பட்டத்தையும் இழந்து போனான் என்று வேதம் கூறுகிறது. ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் கூறினார், நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்@ ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன் என்றான். அவன் பிரசங்கிக்கிறவனாக மாத்திரமல்ல, அதைக் கைக்கொள்ளுகிறவனுமாய் காணப்பட்டான். ஆகையால் நீதியின் கிரீடத்தை பெற்றுக் கொள்ளுவேன் என்ற நம்பிக்கையோடு மரித்தான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, நாம் பரலோகத்தில் போகும் போது, ஆண்டவருடைய கண்களில் பெரியவர்களாய் காணப்பட, கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டு ஜீவியுங்கள். பிரமாணங்களின் படி உங்கள் வாழ்க்கையைக் கட்டுங்கள். பரிசுத்தமாய் ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள். நற்கிரியைகளை நடப்பியுங்கள். தேவனுக்குரியதைத் தேவனுக்கும், ராயனுக்குரியதை ராயனுக்கும் கொடுங்கள். நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டு வாழ்ந்து, மற்றவர்களும் அதை அறிவியுங்கள். அப்போது கர்த்தருடைய பார்வையில் இம்மையிலும், மறுமையிலும் பெரியவர்களாய் காணப்படுவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar