கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? (எரே. 8:22).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Pr-76Qg-Trg
பிசின் தைலம் என்பது ஒருவகை மருந்துப் பொருளாய் காணப்படுகிறது. கீலேயாத் என்ற ஊர் பிசின் தைலத்திற்குப் பெயர்பெற்றது. யோசேப்பின் சகோதரர்கள், கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்ததைக் கண்டு, அவர்களுக்கு அவனை விற்றுப் போட்டார்கள் என்று வேதம் கூறுகிறது. மரத்திலிருந்து எடுக்கப்பட்ட பிசின் தைலம் சரீரத்திற்கு சுகத்தைத் தரக் கூடியது. ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக சிலுவை மரத்தில் மரித்த இயேசுவின் இரத்தம் பாவம் என்னும் குஷ்டத்திலிருந்தும், வியாதிகளிலிருந்தும் விடுதலை தர வல்லமையுள்ளது.
இயேசு என்கிற பெரிய வைத்தியரும் நமக்குக் காணப்படுகிறார். ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையைக் கொடுத்து அவன் விலா எலும்பை எடுத்து ஏவாளை சிருஷ்டித்தவர் அவர். ஜேம்ஸ் யங் சிம்சன் என்பவர் அயர்ந்த நித்திரை என்ற இந்த வேதப் பகுதியைத் தியானித்ததின் விளைவாக குளோரோபாம் என்ற மயக்க மருந்தைக் கண்டுபிடித்தார் என்று சரித்திரம் கூறுகிறது. இது வலியில்லாமல் அறுவை சிகிச்சை செய்வதற்கு மிகவும் பிரயோஜனமாய் இந்நாள்வரைக்கும் காணப்படுகிறது. இயேசு, பிணி யாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்று லூக்கா 5:31ல் கூறினார். உலக வைத்தியர்கள் சரீரத்திற்கு மாத்திரம் சுகத்தைத் தரக்கூடும், ஆனால் நம்முடைய இரணவைத்தியராகிய இயேசு சரீரத்தையும் ஆத்துமாவையும் சுகப்படுத்துகிறவர். இந்த பூமியில் காணப்பட்ட நாட்களில் அவர் நல்ல சமாரியனாய் சுற்றித்திரிந்தார். ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள், சமாரியன் ஒருவன் அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான் என்று வேதம் கூறுகிறது. பிசாசு காயப்படுத்துகிறவன், குற்றுயிராய் விட்டுச் செல்லுகிறவன், ஆனால் இயேசு காயங்கட்டுகிற இரணவைத்தியர். அவர் நம்மைத் தொட்டாலும் சுகம், நாம் அவரை விசுவாசக் கரங்களை நீட்டி தொட்டாலும் சுகம் உண்டாகும்.
ஆண்டவர் கேட்கிறார், தான் இரண வைத்தியனாயிருந்தும் ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள் என்பதாக. தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை, அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது, அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெய்யினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது என்று பின்வாங்கிப் போய் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கின இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தருடைய பிள்ளைகளே. இயேசுவை அண்டிக் கொண்டிருங்கள், அவரை விட்டு தூரம் போய்விடாதிருங்கள். கர்த்தருக்குப் பயந்த ஜீவியம் செய்யுங்கள். அப்பொழுது நீதியின் சூரியனாகிய அவா உங்கள் மேல் உதிப்பார். அவருடைய சிறகின் கீழிருக்கிற ஆரோக்கியம் உங்களை நிரப்பும். நீங்கள் கொழுத்த கன்றுகளாய் வளருவீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae