வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன் (I will make a difference)

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன், இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார் (யாத். 8:23).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/M_-FAd94TuI

விசுவாசிகளின் தகப்பனாகிய ஆபிரகாமோடு கர்த்தர் பேசும்போது,  உன் சந்ததியர் அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து,  அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும்,  அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும்,  நீ நிச்சயமாய் அறியக்கடவாய் என்று கூறினார். அதன்படி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் நானூறு வருஷங்கள் அடிமைகளாய் காணப்பட்டார்கள்,  பார்வோன் அவர்களிடத்தில் அதிக  வேலைகளை வாங்கி,  அவர்களுடைய ஜீவனையே அவர்களுக்கு கசப்பாக்கினான்.  இஸ்ரவேல் ஜனங்கள் ஜெபிப்பதற்குக் கூட பெலனற்றவாகளாய்,  கர்த்தருடைய உதவிக்காகப் பெருமூச்சுகளை ஜெபமாய் ஏறெடுத்தார்கள். கர்த்தர் மோசேயை,  தன் ஜனங்களை விடுவிக்கும் படிக்கு எகிப்திற்கு அனுப்பி வைத்தார். மோசே பார்வோனிடத்தில் போய்,  கர்த்தருக்கு ஆராதனை செய்ய  என் ஜனங்களை அனுப்பிவிடு என்றான். பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தினதால்,  பத்து வாதைகளை ஒவ்வொன்றாகக் கர்த்தர் அனுப்பினார். அந்த வாதைகள் நிமித்தம் எகிப்தியர்கள் மகா கொடிய வேதனைகளை அனுபவித்தார்கள். ஆனால்,  கர்த்தர் தன்னுடைய சொந்த ஜனமாகிய இஸ்ரவேலருக்கும்,  எகிப்தியருக்கும் வித்தியாசத்தை உண்டாக்கினதினால்,  அந்த வாதைகள் இஸ்ரவேல் ஜனங்களை வாதிக்கவில்லை.

கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும் என்று வேதம் எச்சரிக்கிறது (2 தீமத். 3:1). அந்த நாட்களில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கலக்கங்களும்,  திகில்களும்,  யுத்தங்களும், மரணபயங்களும் தேசத்தின் குடிகளைப் பிடித்திருக்கிறது. ஆளுகிறவர்களாலும்,  அரசாங்கங்களினாலும் தங்கள் ஜனங்களைப் பாதுகாக்க முடியவில்லை. பாதாளம் ஜனங்களை வாரிக்கொள்கிறது. இந்தச் சூழ்நிலையில் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு வித்தியாசத்தை உண்டாக்குவேன் என்று வாக்களிக்கிறார். அந்த வித்தியாசத்தைக் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இரத்தத்தினால் உண்டாக்கினார். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு அடையாளமாய் இருக்கும் (யாத்-12:13) என்று கர்த்தர் கூறினார். பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் ஒவ்வொரு வீடுகளின் நிலைக்கால்களிலும் மேற்சட்டத்திலும் பூசப்பட்டது. அதனிமித்தம் அவர்கள் மரணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இயேசு பஸ்கா ஆட்டுக்குட்டியாய் சிலுவையில் தன்னுடைய இரத்தம் முழுவதையும் ஊற்றிக்கொடுத்தார். அவருடைய இரத்தத்தில் வல்லமை உண்டு,  பாதுகாப்பு உண்டு. அதுவே நம்முடைய அடைக்கலமாய் காணப்படுகிறது. இயேசுவின் இரத்தத்திற்குள்ளாக குடும்பமாய் வந்துவிடுங்கள். தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தை உங்கள் மேலும் உங்கள் பிள்ளைகள் மேலும் தெளித்துவிடுங்கள். நன்மையானவற்றை பேசும் இயேசுவின் இரத்தம்,  உங்களைப் பாதுகாப்பதுடன்,  உங்களுக்கு நன்மையுண்டாகும் படிக்கும் செய்யும்

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar