தீங்கு நம்மை சேதப்படுத்தாது (Trouble doesn’t damage us)

தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். சங்கீதம் 27 : 5.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/I7PsF1iZVWI

எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக சமுத்திரமும், பின்பாக எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்து வருகிறதையும் கண்டு, மிகவும் பயந்தார்கள். இப்படிப்பட்டதான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள் என்றார். அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினார். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும், குதிரைவீரர் மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார். மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினார். அப்போது சமுத்திரம் பலமாய்த் திரும்பிவந்து, அவர்கள் பின்னாகச் சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள். எந்தத் தீங்கும் அணுகாமல் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு மதிலாகவும், மேகஸ்தம்பமாகவும், அக்கினிஸ்தம்பமாகவும் இருந்து அவர்களைப் பாதுகாத்தார்

(யாத்திராகமம் 14).

சீரியாவின் ராஜா தோத்தானிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசாவைப் பிடிக்கும்படிக்கு குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான், அவர்கள் இராக்காலத்திலே வந்து தீர்க்கதரிசியாகிய எலிசா இருந்தப் பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். அப்பொழுது தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கிருதைக் கண்டு எலிசாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். இப்படியாக சீரியா ராஜாவின் சேனைகள் தீர்க்கதரிசியாகிய எலிசாவை பிடிக்கக்கூடாதாபடி கர்த்தர் பாதுகாத்தார் (2 இராஜாக்கள் 6: 8 – 23).

நம்முடைய முற்பிதாக்களைப் பாதுகாத்து, எல்லா தீமைகளுக்கும் நீங்கலாக்கி, அவர்களை ஆசீர்வதித்த தேவன் இன்றும் மாறாதவராயிருக்கின்றார் (எபிரேயர் 13 : 8). தேசங்களில் கொள்ளை நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்ற இந்த கடைசி நாட்களிலும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவருடைய வழிகளில் நடக்கின்ற நம்மை அவரே பாதுகாக்கின்றார், எந்தத் தீங்கும் நம்மை சேதப்படுத்தாதபடி அவருடைய கூடார மறைவிலே ஒளித்து வைக்கின்றார்.

கர்த்தர் தாமே நம் அனைவரோடும்கூட எப்பொழுதும் இருப்பாராக. ஆமென்.

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org