கர்த்தருடைய வார்த்தையைத் தொடர்ந்து நினைவூட்டுங்கள். (Keep reminding yourself of the word of the Lord.)

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து,   நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும்,   வழியில் நடக்கிறபோதும்,   படுத்துக்கொள்ளுகிறபோதும்,   எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி,   அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக@ அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.  அவைகளை உன் வீட்டு நிலைகளிலும்,   உன் வாசல்களிலும் எழுதுவாயாக (உபா. 6:6-9).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/emHt-pwt1OE

மோசே மரணமடையுமுன்பு இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த கட்டளையாக மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் காணப்படுகிறது. அவர்கள் நன்றாயிருப்பதற்கும்,   பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் விருத்தியடைந்து பெருகுவதற்கும் கர்த்தர் கற்பித்த கற்பனைகளை,   தொடர்ந்து தங்களுக்குள் நினைப்பூட்டி,   அதைக் கைக்கொண்டு ஜீவிக்க வேண்டும். ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நாமும் நன்றாயிருப்பதற்கும்,   விருத்தியடைந்து பெருகுவதற்கும் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொண்டு,   அவற்றிற்குக் கீழ்ப்படிந்து ஜீவிப்பது அவசியம். 

கர்த்தருடைய வார்த்தை நம்முடைய இருதயங்களில் காணப்பட வேண்டும். அதிகமாக வேதத்தை வாசித்து. தியானிக்கும் போது கர்த்தருடைய வார்த்தை நம்முடைய இருதயங்களில் காணப்படும். விதைக்கிறவனைப் பற்றிய உவமையில் ஆண்டவர் இருதயத்தை நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசுவதைப் பார்க்கமுடியும். நம்முடைய இருதயங்கள் நல்ல நிலமாகக் காணப்படும் போது,   அதற்குள் விதைக்கப்படுகிற வேத வசனங்கள் முப்பது அறுபது நூறுமாக நல்ல பலன்கொடுக்கும். நம்முடைய இருதயமாகிய பொக்கிஷத்தில் கர்த்தருடைய வார்த்தைகள் காணப்பட்டால் ஒழிய,   நம்முடைய பிள்ளைகளுக்கு அதைக் கருத்தாகப் போதிக்க முடியாது.  தீமோத்தேயு பரிசுத்த வேத எழுத்துக்களைச் சிறுவயது முதல் அறிந்தவனாகக் காணப்பட்டான் என்று அப்போஸ்தலனாகிய  பவுல் கூறுவதைப் பார்க்கமுடியும். அதற்குக் காரணம் அவனுடைய தாயும்,   பாட்டியும் விசுவாசிகளாகக் காணப்பட்டார்கள். அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை அவனுக்குக் கற்றுக் கொடுத்து விசுவாசத்தில் வளர்த்தினார்கள். அதுபோல நாமும் கர்த்தருடைய வார்த்தைகளை நம்முடைய பிள்ளைகளுக்குக் கருத்தாகக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

வீடுகளில் உட்கார்ந்திருக்கிறபோதும்,   வழியில் நடக்கிறபோதும்,   படுத்துக்கொள்ளுகிறபோதும்,   எழுந்திருக்கிறபோதும் கர்த்தருடைய வார்த்தைகளைக் குறித்து நாம் நம்முடைய பிள்ளைகளுடன் பேசவேண்டும் என்றும் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. நாம் பள்ளிப் பாடங்களைக் குறித்துப் பேசுகிறோம்,   நன்னெறிகளைக்  குறித்துப் பேசுகிறோம்,   நல்ல பழக்கவழக்கங்களைக்  குறித்துப் பேசுகிறோம்,   உலகக் காரியங்களையெல்லாம் குறித்துக் கூட பேசுகிறோம். ஆனால் கர்த்தருடைய காரியங்களைக்குறித்து பிள்ளைகளோடு பேசுகிற நேரம் குறைவாகக் காணப்படுகிறது. ஆகையால் தான் மேலை நாடுகளிலும்,   நம்முடைய நாடுகளிலும் பிள்ளைகள் வழிதவறி,   கர்த்தருடைய வழிகளையும்,   அவர் சமூகத்தையும் விட்டு விலகி ஜீவிக்கிறார்கள். இந்நாட்களில் ஒருவரோடு ஒருவர் பேசுகிற நேரங்களும் குறைந்துவிட்டது. ஸ்மார்ட் சாதனங்கள் வீடுகளை நிரப்பியதினால் அவைகளுடன் செலவிடுகிற நேரம் கூட,   பிள்ளைகளுடன் செலவிடுவதில்லை. அதுபோல வாகனங்களிலும் பிரயாணங்களிலும் காணப்படும் போதும் கர்த்தருடைய வார்த்தைகளைக் குறித்துப் பேசவேண்டும். படுக்கைக்குச் செல்லும் போதும் எழும்பும் போதும் கர்த்தருடைய வார்த்தைகளைக் குறித்துப் பேசுங்கள். பொதுவாகப் பிள்ளைகள் கதைகளைக் கேட்டுத் தூங்குவது வழக்கம். அவ்வேளைகளில் வேதாகமக் கதைகளைச் சொல்லித் தூங்க வையுங்கள். காலையில் பள்ளிகளுக்கு ஆயத்தமாகிற நேரங்களிலும் கூட கர்த்தருடையக் காரியங்களைக் குறித்துப் பேசுங்கள். அப்படிச் செய்யும் போது,   பிள்ளைகள் விசுவாசத்தில் வளருவார்கள்,   அவர்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

கர்த்தருடைய வார்த்தைகளை நம் கைகளில், அடையாளமாகக் கட்டிக்கொள்ளவேண்டும் என்றும் கண்களுக்கு நடுவே நெற்றியிலும் காணப்பட வேண்டும் என்றும் மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. அது கர்த்தருடைய வார்த்தை நம்முடைய கரங்களில் காணப்படுவதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது,   வேதத்தை நாம் சுமந்தால்,   நம்முடைய கடினமான நேரங்களில் வேத வார்த்தைகள் நம்மைச் சுமக்கும்,   நம்மைத் தேற்றும். நம்முடைய நெற்றிகளில் கர்த்தருடைய வார்த்தை காணப்படவேண்டும் என்பது,   நம்முடைய சிந்தைகள் முழுவதும் கர்த்தருடைய வார்த்தைகளால் நிறைந்ததாகக் காணப்படவேண்டும் என்பதாகும். கர்த்தருடைய வார்த்தைகள் நம்முடைய சிந்தைகளை நிரப்பும் போது,   கிறிஸ்தேசுவிலிருந்த சிந்தை நம்மை நிரப்பும்.  கர்த்தருடைய வார்த்தைகளை வீட்டு நிலைகளிலும்,   வாசல்களிலும் எழுதப்படவேண்டும் என்றும் மேற்குறிப்பிடப்பட்ட வசனம் கூறுகிறது. இந்நாட்களில் வீடுகளில் வசனங்களைத் தொங்கவிடுவது கூட வெட்கமாகிவிட்டது. ஆனால் கண்களுக்குத் தென்படுகிற இடங்களில் கர்த்தருடைய வார்த்தைகள் காணப்படவேண்டும்,   குறிப்பாக எல்லாருடைய கண்களிலும் தென்படுகிற இடமாகிய வீட்டின் நிலைகளிலும், வாசல்களிலும் கர்த்தருடைய வார்த்தைகள் தொங்கவிடப்பட வேண்டும்.  கர்த்தருடைய பிள்ளைகளே,   ஆண்டவருடைய வார்த்தைகளை எப்போதும் உங்களுக்குள் நினைப்பூட்டி,   தியானித்து ஜீவிக்கும் போது,   உங்கள் எதிர்காலம் நன்றாயிருக்கும். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar