விழுந்தாலும் எழுந்திருப்பேன் (Though I fall, I will rise):-

மீகா 7 : 8. என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/hAsMuUKwAY0

புதிதாக பிறந்த குழந்தை நடக்க பழகும்போது அநேகமுறை விழுந்து எழுந்திருக்கும். புதிதாக நீச்சல் கற்றுக்கொள்ளும்போது அநேகமுறை தண்ணீரில் மூழ்கி பின்பு நீச்சலை நன்றாக கற்றுக்கொள்வது இயல்பு. புதிதாக இருசக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொள்ளும்போது சிலமுறை விழுந்து கற்றுக்கொள்வதும் இயல்பு. அதுபோலத்தான் உங்களுடைய ஆவிக்குரிய ஓட்டத்திலும், ஒருசில தடுமாற்றம் வந்தாலும், நீங்கள் மீண்டும் எழுந்திருப்பீர்கள்.

பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலித்தபோதும், மீண்டும் எழுந்து இயேசுவுக்காக செயல்பட்டான். பவுல் சபையை துன்பப்படுத்தினபோதும், பின் நாட்களில் எல்லாரைக்காட்டிலும் அதிகமாய் பிரயாசப்பட்ட மிகப்பெரிய அப்போஸ்தலனாக கர்த்தர் வனைந்தார். கூடவே இருந்த தோமா, இயேசு உயிரோடு எழுந்ததை சந்தேகப்பட்டவனாய் இருந்தபோதும், மீண்டும் அவன் இயேசுவுக்காக வைராக்கியமாக எழும்பி இந்திய தேசம் வரைக்கும் சுவிசேஷத்தை விதைக்கிறவனாக கர்த்தர் அவனை மாற்றினார்.

ஒருபோதும் ஒரு சில தடுமாற்றங்களால் நம்பிக்கையை இழந்து, சோர்வுற்று, கலங்கி எழும்ப முடியாமல் சந்துருவின் கண்ணிக்குள்ளாக சிக்கிக்கொள்ளாதிருங்கள். மாறாக சந்துருவை பார்த்து சொல்லுங்கள் நான் விழுந்தாலும் எழுந்துருப்பேன். என்னை தூக்கி நிறுத்த இயேசு என்னோடு கூட உண்டு. அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார் (சங் 37:24 ) என்ற வசனத்தையும் உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது (சங் 91:7 ) என்ற வசனத்தையும் மறந்துபோய்விடாதிருங்கள். மரண இருளின் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் என்று தைரியமாக சொல்லுங்கள்.

நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள் (நீதி 24:16 ). நீங்கள் விழுந்தாலும் எழுந்திருப்பீர்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org