தேவனோடு போர்செய்யாதிருங்கள் (Don’t fighting against God).

தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான் (அப். 5:39).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/1iNaWK7DRrU

தேவனுடைய பிள்ளைகள், நம்மை உருவாக்கியவரோடு போர் செய்கிறவர்களாய், எதிர்த்துநிற்கிறவர்களாய் காணப்படலாகாது. அதுபோல கர்த்தரை அறியாதவர்களும் அவருடைய பிள்ளைகளுக்கு விரோதமான காரியங்களைச் செய்வதின் நிமித்தம் கர்த்தரோடு யுத்தம் செய்கிறவர்களாய் காணப்படலாகாது. அப்போஸ்தலனாகிய பவுல், சவுலாய் காணப்பட்ட நாட்களில் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்துவதற்கு தமஸ்கூவுக்கு கடந்து சென்ற வேளையில், ஆண்டவர் அவனைச் சந்தித்து, ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய், முள்ளில் உதைக்கிறது உனக்கு ஆபத்தைக் கொண்டுவரும் என்று எச்சரித்தார்.

கமாலியேல் என்ற பரிசேயன், ஆசாரியர்களுக்கும்,சதுசேயர்களுக்கும் கொடுத்த ஆலோசனையாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. ஆதிசபையின் நாட்களில் அப்போஸ்தலர்களால் அனேக அற்புதங்களும் அடையாளங்களும் நடந்தது. திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிக மதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். ஆகையால் இதைத் தடைசெய்வதற்கு ஆசாரியர்களும் சதுசேயர்களும், அப்போஸ்தலர்களுக்கு உபத்திரவங்களைக் கொடுத்தும், சிறைச்சாலைகளில் அடைத்தும் துன்பத்தைக் கொடுத்தார்கள். ஆகிலும் வேதவசனம் விருத்தியடைந்து பெருகினது. அந்தவேளையில் காமாலியேல் என்ற பரிசேயன் தேவனோடு போர்செய்யாதிருங்கள், அவரிடத்திலிருந்து வருகிற எந்தக் காரியத்தையும் யாராலும் தடைசெய்யமுடியாது என்று ஆலோசனைக் கூறினான்.

பிசாசு, நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ இருதயத்தில் சொல்லி கர்த்தரோடு போராடும்படிக்கு முயன்றான். கர்த்தர் அவனை வானத்திலிருந்து தள்ளினார். பார்வோன் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்கு, அவர் யார்? என்று கேள்வி கேட்டு அவருடைய  வார்த்தைக்கு எதிர்த்து நின்றான். அவனையும், அவன் சேனையையும் செங்கடல் வாரிக்கொள்ளும் படிக்குக் கர்த்தர் செய்தார். நேபுகாத்நேச்சார் என்ற பாபிலோனிய ராஜா, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பார்த்து, உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றுக் கேட்டு, தேவனைப் பார்க்கிலும் தன்னை வல்லமை பொருத்தியவனாகக் கருதினான். கர்த்தர் அவனைப் புல்லைத் தின்னும்படிக்கு செய்தார். கர்த்தரோடு யாரும் யுத்தம் செய்யவும், எதிர்த்து நிற்கவும் கூடாது, அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்.

உலக ஜனங்கள், தங்கள் அறியாமையினால் தேவனுக்குப் பிரியமில்லாதக் காரியங்களைச் செய்தும், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமான காரியங்களைச் செய்தும், அவரோடு எதிர்த்து நிற்கிறவர்களாய் காணப்படுவதுண்டு. ஆனால் கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜனங்கள் ஒருநாளும் நம்முடைய செய்கைகளின் நிமித்தம் கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கலாகாது. அவரோடு யுத்தம் செய்கிறவர்களாய் காணப்படக் கூடாது. இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் காணப்பட்ட நாட்களில் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து, கர்த்தர் செய்த நன்மைகளை அற்பமாய் எண்ணி, அவரோடு யுத்தம் செய்து அழிந்தார்கள். நாம் மேட்டிமைக் கொள்ளும் போது கர்த்தருடைய தாழ்மையின் சிந்தைக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறோம். பாவங்கள் செய்யும் போது கர்த்தருடைய பரிசுத்தத்திற்கு விரோதமாய் காணப்படுகிறோம். நாம் முறுமுறுக்கும் போது கர்த்தர் செய்த நன்மைகளை மறந்துபோகிறோம். ஊழியங்களுக்கு விரோதமாகவும்,ஊழியர்களுக்கு விரோதமாகவும் எழும்பும் போது, கர்த்தர் கொடுத்த தரிசனங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்கிறோம். இப்படி அனேக காரியங்களை அனுதினமும் செய்து கர்த்தருடைய கோபத்தைச் சம்பாதிக்கிறவர்களாய் காணப்படுவதுண்டு. ஆகையால் இனி தேவனோடே போர்செய்யாதவர்களாய் காணப்படுங்கள், அவரோடு எதிர்த்து நிற்காதிருங்கள். அவருக்கு கோபமூட்டாதிருங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org