பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியுவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள் (லேவி. 10:1).
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/KMNxZMgXqCs
வேவியராகம புஸ்தகம், கர்த்தரை தொழும் முறைமையைக் குறித்து எழுதப்பட்ட கையேடாகக் காணப்படுகிறது. அதில் பலிகளைக் குறித்தும், பண்டிகைகளைக் குறித்தும், அவைகள் இயேசுவை சுட்டிக்காட்டுவதையும் குறித்து அறிந்து கொள்ளலாம். ஆசாரிய ஊழிய முறைமைகளையும், அவர்கள் தங்களை பரிசுத்தப்படுத்த வேண்டிய விதங்களைக் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. ஆசாரியர்களுடைய பிரதான வேலைகளில் ஒன்று, ஆசரிப்பு கூடாரத்தில் காணப்படும் பலிபீடத்தின் மேல் நெருப்பு அவியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்காய் காலைதோறும் கட்டைகளைப் போட்டு, நெருப்பை மூட்டி, அதைத் தொடர்ந்து எரியும்படிக்குச் செய்யவேண்டும். ஆரோனும் அவனுடைய நான்கு குமாரர்களும், ஆசரிப்பு கூடாரப் பணிக்காக விஷேசித்த விதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும் பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களைக் கர்த்தர் கொடுத்தார். அவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகளாகக் காணப்பட்டார்கள், கர்த்தரே அவர்களுடைய சுதந்திரமாகக் காணப்பட்டார். இப்படி அனேக மேன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்ற, ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியுவும், ஒரு நாள் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது பரிசுத்த அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.
கர்த்தருடைய ஜனங்களாகிய நம்மை ஊரில் ஒருவனும் வம்சத்தில் இரண்டு பேருமாக அவர் தெரிந்து, அவருடைய சத்திய வசனத்தை அறியும்படிக்கு நம்முடைய கண்களைத் திறந்து, ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிக்கும்படிக்கு செய்து, லேவியர்களாகவும், ஆசாரியர்களாகவும் வைத்திருக்கிறார். எழுப்புதல் அக்கினி அவிந்து போகாதபடிக்கு, அதைப்பற்றி பரவும்படிக்குச் செய்யும் பாத்திரங்களாக நாம் காணப்படவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆகையால் அந்த தெரிந்துகொள்ளுதலின் மேன்மையையும், அழைப்பின் மேன்மையையும் உணர்ந்து, உத்தரவாத்தோடு கர்த்தருடைய ஜனங்கள் காணப்பட வேண்டும். வேதம் காட்டாத ஆராதனை முறைகளையும், அந்நிய போதனைகளையும், புறஜாதிகளுடைய பழக்கவழக்கங்களையும் விட்டு விலகவேண்டும். சபைகளிலும், திருமணங்களிலும், குடும்பங்களிலும் வசனத்திற்கு புறம்பான எந்தக் காரியங்களும் காணப்படலாகாது. என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன், அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள் என்று ஆண்டவர் வேதனைப் படுகிறார். யூதாவின் குடிகள் கர்த்தருடைய வார்த்தையின்படி செய்யாமல், புறஜாதிகளின் பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொண்டு, அதின்படி செய்ததினால் எஸ்றா மனக்கசந்து அழுதான்.
கர்த்தருடைய அக்கினி நம்மைப் பரிசுத்தப்படுத்தும், நம்மைப் பாதுகாக்கும், எழுப்புதலடையும்படிக்குச் செய்யும். ஆனால் அதே அக்கினி நியாயத்தீர்ப்பின் அக்கினியாகவும் மாறும். ஆகையால் அந்நிய பழக்கவழங்கங்களோடு அல்ல, வேத வார்த்தைகளின் படிக்கு கர்த்தரை சேவிக்க நம்மை அற்பணிப்போம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar