நம்பிக்கையோடு காத்திருங்கள் (Wait for hope).

கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது (புலம்பல் 3:26).

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/kCMO4nkV-CU

கடினமான சூழ்நிலைகளில் கடந்து செல்லும் போது,  கர்த்தருடைய பிள்ளைகள் ஆண்டவருடைய விடுதலைக்காய் நம்பிக்கையோடு காத்திருக்கவேண்டும். உங்கள் நம்பிக்கை ஒருநாளும் வீணாய்ப்  போவதில்லை. ஆண்டவர் பேரில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை ஒரு போதும் உங்களை வெட்கப்படுத்துவதுமில்லை.

ஆண்டவருடைய கோபத்தினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான் என்று புலம்பல் 3வது அதிகாரத்தை எரேமியா துவங்குகிறார். எரேமியாவின் மேல் ஆண்டவருக்குக் கோபமில்லை,  அவர் ஒரு நல்ல தீர்க்கதரிசி. கர்த்தர் அவரை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே அறிந்து,  கர்ப்பத்திலிருந்து வெளிப்படு முன்னே பரிசுத்தம் பண்ணி,  அவரை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டார். ஆனால் யூதாவின் ஜனங்களின் பாவத்தினிமித்தம் அவர்கள் மேல் உண்டான கர்த்தருடைய கோபத்தின் விளைவை எரேமியாவும் சந்திக்கவேண்டியதாயிருந்தது. சில வேளைகளில் தேசத்தின் தலைவர்களுடைய பாவத்தைக் அதின் குடிகள் அனுபவிக்கவேண்டும்,  தாவீது ஜனங்களை தொகையிடும்படிக்கு சாத்தானால் ஏவப்பட்டதின் நிமித்தம் அவன் குடிகள் எழுபதினாயிரம் பேர் மரித்துப் போனார்கள்,  அதுபோல தேசத்தின் குடிகளுடைய பாவத்தை அதின் தலைவர்களும்,  நல்ல தீர்க்கதரிசிகளும் கூட சந்திக்கவேண்டும். ஆகையால் தான் எரேமியா கூறுகிறார்,  கர்த்தர் என்னை இருளில் அழைத்துக் கொண்டுவந்தார்,  அவர் கரத்தை எனக்கு விரோதமாகத் திருப்பினார்,  என் சதையையும் தோலையும் முதியவர்களைப் போல மாற்றினார்,  என் எலும்புகளை நொறுக்கினார் என்று ஆண்டவருடைய கோபத்தின் விளைவினால் எரேமியாவிற்கு உண்டான வாதைகளின் பட்டியல் நீண்டுகொண்டு போகிறது. துன்மார்க்கர்களுக்கும் நீதிமான்களுக்கும் சில வேளைகளில் ஒரேவிதமாக சம்வவிக்கும் போது ஏன் என்று கேள்வி கேட்கிறோம்,  அதற்குக் காரணம் தேசத்தில் காணப்படுகிற அதிகமான ஜனங்களுடைய பாவங்களாய் காணப்படுகிறது. கொள்ளை நோயின் நிமித்தம் தேசங்கள் முழுவதும் அழிவு காணப்படுகிறது,  ஆனால் பத்து நீதிமான்கள் இருந்தால் தேசத்தை அழிப்பதில்லை என்பது கர்த்தர் ஆபிரகாமுக்கு வாக்குக் கொடுத்தார். இருப்பினும் ஏன் இவ்வளவு அழிவுகள்,  ஏன் நீதிமான்கள் கூட மரித்துப் போகிறார்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது அது தேசத்தின் குடிகளுடைய பாவத்தின் விளைவாகவும்,  அதின் தலைவர்களுடைய பாவங்களின் விளைவாகவும் காணப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டு. யோபு பாடுகளின் வழியாகக் கடந்து சென்ற வேளையில் என் மீட்பர் உயிரோடிருக்கிறார்,  அவரை என்னுடைய கண்கள் காணும்  என்று விசுவாச அறிக்கைச் செய்தான். இதோ,  பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள், கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுள்ளவராயிருக்கிறார் (யாக். 5:11),  யோபு பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்திருந்ததைக் கண்ட கர்த்தர் இரட்டிப்பான நன்மைகளைக் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். அதுபோல எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய விடுதலைக்காய் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். அவருக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் அவரைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்(புலம்பல். 3:25). கர்த்தரிடத்திலிருந்து விடுதலை துரிதமாக வருகிறது,  நம்பிக்கையோடு காத்திருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org