பொறுமையாயிருங்கள் (Be Patient)

யாக் 5:11. இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/p1VBwiTevlE

யோபு உபத்திரவத்தின் பாதையில் கடந்து சென்றபோது பொறுமையாய் இருந்தான். கர்த்தருக்காக, அவருடைய வேலைக்காக பொறுமையாய் காத்திருந்தான். ஆபிரகாம் வாக்குத்தத்தின் பிள்ளையை பெற்றெடுப்பதற்கு முன்பாக பொறுமையை இழந்து இஸ்மவேலைப் பெற்றான். இப்படியாக இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான குணாதிசயம் பொறுமையாய் காணப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் எல்லா சூழ்நிலைகளிலும் பொறுமையாய் இருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

யோபு உபத்திரவத்தின் குகையில் கடந்து சென்றபோது பொறுமையோடும் விசுவாசத்தோடும் இருந்தான் என்பதை அவன் பேசிய வார்த்தைகளில் நாம் கண்டுகொள்ளலாம். பிள்ளைகளை இழந்து உபத்திரவத்தில் இருந்தபோது யோபு சொல்லுவான் நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான் (யோபு 1:21); மனைவி யோபுவிடம், நீ நம்புகிற இந்த தெய்வத்தை தூஷித்து உன் ஜீவனை விடும் என்று சொல்லும்போது, அவன் சொல்லுவான், நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ (யோபு 2:10) என்பதாக. எல்லாரும் அவனை கைவிட்டபோது, மறந்தபோது, அவனை அந்நியனாக எண்ணியபோது சொல்லுவான், என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்(யோபு 19:25) என்பதாக. ஆண்டவரை எல்லாப்பக்கத்திலும் தேடியும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. முன்னால், பின்னால், இடதுபுறம், வலதுபுறம் என்று எல்லா திசைகளிலிருந்தும், யோபுவால் அவரை காணமுடியவில்லை. அந்த நேரத்தில் யோபு சொல்லுவான் ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன் (யோபு 23:10). மாத்திரமல்ல யோபு சொல்லுவான் கர்த்தர் எனக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார் என்பதாக. உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களுக்கென்று என்று சொல்லி ஏற்கெனவே சில ஆசீர்வாதங்களை குறித்துவைத்திருக்கிறார். உங்களுக்கு இந்த இடத்தில வேலை என்றும், உங்களுக்கு இத்தனை குழந்தைகள் என்றும் ஏற்கெனவே அவர் குறித்து வைத்திருக்கிறார். உங்களுக்கு குறித்ததை கர்த்தர் நிறைவேற்றுவார். இன்னும் யோபு சொல்லுவான் தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் என்பதாக.

இப்படி யோபு பொறுமையாக கர்த்தருக்காக காத்திருந்ததால், ஆண்டவர் அவனுடைய சிறையிருப்பை மாற்றினார், இரட்டிப்பான நன்மையை அவன் வாழ்க்கையில் கர்த்தர் செய்தார். யோபுவின் முன்னிலைமையை பார்க்கிலும் அவன் பின்னிலைமை ஆசீர்வாதமாக இருந்தது. யோபுவைபோல பொறுமையாய் இருங்கள். கர்த்தர் உங்களுக்கும் இரட்டிப்பான நன்மையை கொடுத்து ஆசீர்வதிப்பார். நீங்கள் யோபுவைபோல செல்வந்தர்களாக இருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org