உன் நடையைக் காத்துக்கொள் (Guard your steps)

நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள், மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள் (பிரசங்கி 5:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/-Ehb1MUM8Dk

தேவாலயத்திற்கு நாம் செல்லுவது நம்மைச் சரிப்படுத்துவதற்கும்,  நல்வழிகளைக் கற்றுக்கொண்டு,  கர்த்தருக்குப் பயந்து,  பயபக்திக்குரிய ஜீவியம் செய்வதற்காகவும்  காணப்படுகிறது. ஆனால் தேவாலயத்திற்கு வருவதற்கு முன்பாகவே நாம்  நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும் என்றும் மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. நம்முடைய நடைகளை நாம் காத்துக் கொள்ளவேண்டும்,  நடை என்பது நம்முடைய சரியான கிறிஸ்தவ ஜீவியத்தையும்,  ஒழுக்கமுள்ள வாழ்க்கையையும்,  நன் நடத்தையையும் குறிக்கிறது. இந்நாட்களில் பிரயாணங்களுக்காக ஆயத்தப்படுகிறோம்,  நேர்காணலுக்காகவும்,  திருமணங்களுக்காகவும்,  படிப்புகளுக்காகவும் கூட நாம் ஆயத்தப்படுவதுண்டு. ஆனால்,  கர்த்தருடைய சமூகத்திற்கு வருவதற்கு நம்மை ஆயத்தப்படுத்துவதில்லை. பொழுதுபோக்கு இடங்களுக்குக் கடந்து செல்லுவது போல நிர்விசாரத்தோடு செல்கிறோம்,  அஜாக்கிரதையாகச் செல்கிறோம்.  சரியான நேரங்களில் கடந்து செல்லுவதில்லை,  ஆகையால் கர்த்தருடைய நாமம் கனவீனப்படுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே,  தேவாலயத்திற்கு நாம் வந்து ஆராதிப்பதற்கு  முன்பாகவே,  நம்முடைய வீடுகளிலிருந்தே ஆராதனையும்,  ஆயத்தமும் நம்மில் துவங்குகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். 

மூடர்கள் பலியிடுவதைப் போலப் பலியிடாமலும்,  துணிகரமான வார்த்தைகளைப் பேசாமலும் கர்த்தருடைய ஜனங்கள் காணப்பட வேண்டும். ஜெபிக்கும் படிக்கு ஆயக்காரனும்,  பரிசேயனும் தேவாலயத்திற்குச் சென்றார்கள். பரிசேயன் அனேக மேட்டிமையின் வார்த்தைகளைக் கூறி ஜெபித்தான்,  ஆனால் ஆயக்காரன் பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று சுருக்கமாக ஜெபித்தான். ஆயக்காரனே நீதிமானாய் தேவனுடைய சமூகத்திலிருந்து கடந்து சென்றான். இன்று கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் இல்லாதபடி துணிகரமான வார்த்தைகளையும்,  பாவங்களையும் ஆலயத்தில் செய்கிறவர்கள் திரளாய் உண்டு,  அரசியல் செய்கிறவர்களும் உண்டு,  பரிசுத்த ஸ்தலத்தில் அசுத்தங்கள் காணப்படுகிறது,  ஆண்டவர் ஆலயத்திற்குள் காணப்படுவதற்குப் பதிலாக,  லவோதிக்கேயா சபையைப் போல வாசலில் நின்று தட்டுகிறவராகக் காணப்படுகிறார், கர்த்தருடைய ஜனங்கள் மனம் திரும்ப வேண்டும்.

ஆலயத்திற்குக் கடந்து செல்லுவதின் பிரதான நோக்கம்,  கர்த்தருடைய வார்த்தைக்குக் கேட்டு,  அதற்குச் செவிகொடுக்கவும் கீழ்ப்படியவும் என்பதை மறந்து விடாதிருங்கள்.  கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு,  மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்,  எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து,  நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும்,  யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்,  அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார்,  நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்,  ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும்,  எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். கர்த்தருடைய வார்த்தை பேதையை ஞானியாக்கும்,  அது நம்மைப் பாக்கியவான்களாக மாற்றும். ஆகையால் தேவனுடைய வார்த்தையை வாஞ்சையோடு கேட்பதற்கு ஆலயத்திற்குக் கடந்து செல்லுங்கள். நீங்கள் கேட்டு,  கீழ்ப்படியும் போது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar