கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்(ஏசாயா 25:4).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/QeHSRxbol4s
மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் வெயிலின் தாக்கத்தை அதிகமாய் அறிந்திருப்பார்கள். குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் வெப்பம் மிக அதிகமாகக் காணப்படும். பருவ நிலை மாற்றத்தின் காரணமாக உலகின் மற்ற பகுதிகளிலும் இப்போது இதே நிலை காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் நமக்குள்ளாகக் களைப்பையும், சோர்வையும் கொண்டு வரும். யோனா நினிவேயில் காணப்பட்ட வேளையில், அவன் தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார், அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். ஆனால் மறுநாளில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார், அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது, அதனால் அது காய்ந்துபோயிற்று. சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்காற்றைக் கட்டளையிட்டார், அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். யாக்கோபு கூட லாபானிடம் கூறும் போது, பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது, நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது, இவ்விதமாய்ப் பாடுபட்டேன் என்பதாக. யோபு உபத்திரவங்களின் பாதையில் சென்றபோது, என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று என்று கூறினான். சூலமித்தி கூறும்போது, நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாரா தேயுங்கள், வெய்யில் என்மேற்பட்டது, என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள் என்று கூறினாள். சூரியனின் வெப்பம் மட்டுமல்ல, நம் வாழ்க்கையில் வருகிற பாடுகளும், கஷ்டங்களும், சோதனைகளும், காத்திருப்புகளும், பற்றாக்குறைகளும் கூட சூரியனைப் போல நெருப்பாய் நம்மேல் வீசுகிற வேளைகளுண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நமக்கு, நாம் ஆராதிக்கும் தேவன் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலாய் காணப்படுகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் பயணம் செய்த வேளையில் அவர்கள் மேல் கர்த்தர் மேகஸ்தம்பமாய் காணப்பட்டார். ஆகையால் வெயிலின் உஷ்ணம் அவர்களைச் சேதப்படுத்த முடியவில்லை. உன்னதமான தேவன் நம்மை அவருடைய மறைவில் வைத்து, அவருடைய நிழலில் தங்கும் படிக்குச் செய்வார். அவர் நம்மைச் சிலுவையின் நிழலில் வைத்துப் பாதுகாக்கிறவர். அவர் விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாக இருப்பார். கானானில் காணப்பட்ட கானானியர்களைக் காத்த நிழல் அவர்களை விட்டு விலகினது போல, நம்மைக் காக்கும் கர்த்தருடைய நிழல், அவருடைய பிள்ளைகளாய் நாம் காணப்படுவதினால், நம்மை விட்டு ஒருநாளும் விலகாது. சூலமித்தியைப் போல, காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார், அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், என்றதைப் போல நாமும் இயேசுவின் நிழலில் வாஞ்சையாய் தங்க நம்மை அர்ப்பணிப்போம். அப்பொழுது இந்ந மாதம் முழுவதும் கர்த்தர் உங்களைக் கண்மணி போலக் காத்து, எல்லாத் தீங்கிற்கும் உங்களை விலக்கி ஆசீர்வதிப்பது உறுதி.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae