கர்த்தரைக் கனம்பண்ணு (Honor your LORD)

நீதி 3:9,10 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/_tmzlN91EqE

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள் என்று நீதி 3:6 வது வசனத்தில் சொல்லிவிட்டு உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு என்று ஆரம்பிக்கிறதை பார்க்கமுடிகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய சம்பாத்தியத்தில் ஆண்டவருக்கு சிறந்ததையும், முதற்பலனையும் கொடுத்துக்கொண்டு வந்தார்கள். அதுவே கர்த்தருடைய கட்டளையாகவும் காணப்பட்டது. உலகத்திலிருக்கும் ஜனங்களை கனப்படுத்தும்போது நாம் அவற்றை நம்முடைய செயலில் அவர்களுக்கு காண்பிக்கிறோம். அதுபோல, கர்த்தரை கனம்பண்ணுவதை நாம் செயலில் காண்பிக்கவேண்டும்.

முதற்பலனை கர்த்தருக்கு கொடுத்து அவரை நாம் கனம்பண்ணவேண்டும். அநேகர் முதற்பலனை கொடுக்காமல் மீதமிருப்பதை கர்த்தருக்கு கொடுக்கிறவர்களாய் காணப்படுகிறார்கள். சம்பாத்தியத்தில் முதலில் வங்கிக்கு செலுத்தவேண்டிய கடன், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது, பிள்ளைகளுக்கு பள்ளிக்கூட கட்டணங்களை செலுத்துவது, மின்கட்டணம், தொலைபேசி கட்டணம், வீட்டு வரி, இணையதள கட்டணம் போன்ற எல்லா செலவுகளையும் செய்துவிட்டு, மீதம் எவ்வளவு இருக்கிறதோ அவற்றை கர்த்தருக்கு கொடுத்து அவரை கனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்வகையான கனத்தை ஆண்டவர் ஏற்றுகொள்ளுவதில்லை. ஆண்டவர் எதிர்பார்ப்பது முதற்பலன் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

நாம் எல்லாரும் நம்முடைய ஆஸ்திகளுக்கும், பொருளாதாரத்திற்கும் சொந்தக்காரர்கள் அல்ல; ஆண்டவர் கொடுத்து நம்மை ஆசீர்வதிக்கிற பொருளாதாரத்தை நிர்வகிக்கிற மேற்பார்வையாளர்கள் மாத்திரமே என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும். எப்படி ஒரு அலுவலகத்தில் பணிபுரியும் நிர்வாகி, கொடுக்கப்பட்ட வேலையை மேற்பார்வையிடுகிறாரோ, அதுபோல, கர்த்தர் கொடுக்கிற பொருளாதாரத்தை நாம் மேற்பார்வையிடுகிற Managers என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள் (லேவி 23:10) என்று வசனம் கூறுகிறது.

நாம் கர்த்தருக்கு முதற்பலனை கொடுக்கும்போது, நாம் பணக்காரர்களாக வேண்டும் என்ற சூத்திரத்தின் (Formula) அடிப்படையில் கொடுக்கக்கூடாது. மாறாக, நாம் கர்த்தரை கனம்பண்ணவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட இருதயத்தோடு கொடுக்கும்போது, இரண்டு காரியங்கள் நடைபெறும். ஒன்று பூரணமாய் நிரையும். கர்த்தர் உங்கள் களஞ்சியங்கள் பூரணமாய் நிரையும்படி ஆசீர்வதிப்பார். இரண்டாவது நதி, தண்ணீர் புரண்டோடுவதுபோல, உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். இயேசு சொன்னார் கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும் என்று. யாரை கனம்பண்ண தவறினாலும், கர்த்தரை கனம் பண்ண தவறிவிடாதிருங்கள். உங்களுடைய நோக்கம் முதலீட்டின் மீதான வருமானம் என்று அல்லாமல், கர்த்தரை கனம் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் விதையுங்கள். அப்பொழுது நூறத்தனையான பலனை கர்த்தர் உங்களுக்கு கொடுத்து உங்களை மேன்மைப்படுத்துவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org