வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் (It is more blessed to give than to receive)

அப் 20:35. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லாவிதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/0CSsidf1YVc

இன்றைக்கு எல்லாருடைய தேவையும் முயற்சியும் எப்படியாவது அதிகமான செல்வங்களை சம்பாரிக்கவேண்டும். அதுவும் சீக்கிரத்தில் பணம் சம்பாரிக்க வேண்டும் என்பதாய் காணப்படுகிறது. காசேதான் கடவுளடா என்று உலகம் சொல்லும்; ஆனால் நமக்கு அந்த காசை கொடுப்பவர் தான் கடவுள். உலக நாடுகளும் தாங்கள் செல்வமிக்க நாடாய் காணப்படவேண்டும் என்று அநேக முயற்சிகளை எடுக்கிறார்கள். எரேமியா தீர்க்கதரிசி சொல்லுகிறார் அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர் (எரே 6:13) என்பதாக. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொருளாசைக்காரர்களாய் காணப்படுகிறார்கள். ஊழியக்காரர்களும் விதிவிலக்கல்ல. ஊழியத்திற்காக பணம் என்ற நிலை மாறி, பணத்திற்க்காக ஊழியம் என்ற நிலையில் அநேக ஊழியக்காரர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் ஊழியங்களெல்லாம் வணிக முறையில், எப்படி லாபத்தை பெருக்குவது போன்ற கலாச்சாரத்திற்குள் சென்றுவிட்டார்கள்.

ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது என்பதாக. ஆதி அப்போஸ்தலர்கள் மற்றவர்களுடைய பணத்தை இச்சிக்காமல் தேவ இராஜ்யத்தை கட்டினார்கள்.

பவுல் இன்னும் சொல்லுகிறார் வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்பதாக. தேவன் நம்முடைய குறைவுகளெல்லாம் மாற்றி நிறைவாக ஆசீர்வதிக்கிறவர். அவர் ஐஸ்வரியசம்மன்னர். பூமியும் அதின் குடிகளும் கர்த்தருடையவைகள். கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் மேல் நீதியின் சூரியன் உதிப்பார். நாம் எல்லாரும் பணக்காரர்களாக, செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பமே கர்த்தருடைய விருப்பம். அதேவேளையில் கர்த்தர் கொடுக்கும் சம்பத்தை மற்றவர்களுக்கு கொடுத்து நீங்கள் அசீர்வாதத்தின் வாய்க்கலாக இருக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். பலவீனரை தாங்குங்கள். சம்பாத்தியத்தில் பாதி நமக்கு பாதி மற்றவர்களுக்கு என்பது பூரணத்தை நோக்கி பயணிப்பது. சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான் (லுக் 19:8). யோவான் ஸ்நானகன் சொன்னான் இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
இயேசு சொன்னார் இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார் (லுக் 18:22) என்பதாக. ஞானி சொல்லுகிறார் நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே (நீதி 3:27,28) என்பதாக. ஆகையால் வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியம் என்றறிந்து பணம் போன்ற காரியங்களிலும் பூரணத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org